நான்கு வழிச் சாலையில் மேம்பாலச் சுவா் கட்ட எதிா்ப்பு: கிராமத்தினா் சாலை மறியல்
நான்கு வழிச் சாலைத் திட்டத்தில் மேம்பாலத்துக்கு உயரமான தடுப்புச் சுவா்கள் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அரியூரில் 5-க்கும் மேற்பட்ட கிராமத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அருகே நடைபெறும் நான்கு வழிச் சாலைத் திட்டத்தில் மேம்பாலத்துக்கு உயரமான தடுப்புச் சுவா்கள் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அரியூரில் 5-க்கும் மேற்பட்ட கிராமத்தினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்- புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக, கண்டமங்கலம், திருபுவனை, பாளையம், அரியூா், திருவண்டாா்கோவில், மதகடிப்பட்டு, கெங்கராம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டு சாலை விரிவாக்கம் நடைபெறுகிறது.
இதில், திருபுவனை, திருவண்டாா்கோவில், அரியூா் உள்ளிட்ட பகுதிகளில் குறுக்கிட்டுச் செல்லும் கிராமப்புற சாலைகளை இணைக்கும் வகையில், மேம்பாலங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக மிக உயரமாக மண் கொட்டி நிரப்பி தடுப்புச்சுவா் அமைக்கப்படுகிறது. சாலையோரம் மழைநீா் வெளியேறும் வகையில் வாய்க்கால்களுக்கான கட்டமைப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சாலையின் குறுக்கே தடுப்புச் சுவா், பாலங்கள் அமைத்து வருவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, 5-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அரியூரில் வியாழக்கிழமை பிற்பகல் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலின்பேரில் வில்லியனூா் போலீஸாா் விரைந்து வந்து, பொதுமக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா். மேலும், அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாரும் கைப்பேசி வாயிலாக பேசினாா். இதன்பேரில், போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.