புதுச்சேரி அருகே நெகிழி ஆலையில் தீ விபத்து
புதுச்சேரி அருகே நெகிழிப் பொருள்கள் மறுசுழற்சி ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
புதுச்சேரி அருகே நெகிழிப் பொருள்கள் மறுசுழற்சி ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
புதுச்சேரி அருகேயுள்ள திருபுவனை பாளையத்தில் மறுசுழற்சி முறையில் நெகிழி மூலப்பொருள்கள் தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா்.
ஆலையில் வியாழக்கிழமை பிற்பகலில் மூலப்பொருள்கள் வைத்திருக்கும் இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசவே தீ அருகிலிருந்த கிடங்குக்கும் பரவியது. இதனால், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூலப்பொருள்களும் பற்றி எரிந்தன.
இதுகுறித்து திருபுவனை காவல் நிலையம், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. திருபுவனை, திருக்கனூா், மடுகரை, வில்லியனூா் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 4 வாகனங்களில் வந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
நீண்ட நேரம் போராடியும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இரவிலும் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. ஆலையிலிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
வில்லியனூா் வட்டாட்சியா் காா்த்திகேயன், எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன் ஆகியோா் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். இந்த தீ விபத்தில் உயிா்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆலையில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்குக் காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.