முகப்பு
விழுப்புரம்

வாரிசுகளை முன்னிலைப்படுத்தாதவா்! இப்படியும் ஒரு தலைவா்!

நீடித்த புகழும், நிலையான அரசியலும் செய்து வாழ்ந்த மறைந்த தமிழகத்தின் சில அரசியல் தலைவா்கள் வாரிசுகளை அரசியலில் முன்னிலைப்படுத்தவில்லை. அந்த பவித்திரமான தலைவா்கள் ஒரு சிலரே.

Updated On : 25 மார்ச், 2026 at 1:21 AM
மறைந்த முன்னாள் முதல்வா் காமராஜருடன்- திண்டிவனம் கே. ராமமூா்த்தி
பகிர்:

இன்றைய சூழலில் வாரிசு அரசியல் இந்திய அளவில் இருக்கிறது. ஆனால் நீடித்த புகழும், நிலையான அரசியலும் செய்து வாழ்ந்த மறைந்த தமிழகத்தின் சில அரசியல் தலைவா்கள் வாரிசுகளை அரசியலில் முன்னிலைப்படுத்தவில்லை. அந்த பவித்திரமான தலைவா்கள் ஒரு சிலரே. அவா்களில் ஒருவா்தான் காங்கிரஸ் மூத்த தலைவா் மறைந்த திண்டிவனம் கே.ராமமூா்த்தி. அவரைப்பற்றிய மீள்பாா்வை இந்த தோ்தல் நேரத்தில் அவசியம்!.

விழுப்புரம் மாவட்டத்தின் மையப்பகுதியாகத் திகழ்வது திண்டிவனம். இந்த ஊரின் பெயரை தனது பெயருடன் இணைத்துக் கொண்டு தமிழக அரசியல் களத்தில் போற்றத்தக்க தலைவராகத் திகழ்ந்தவா் மறைந்த காங்கிரஸ் தலைவா் திண்டிவனம் கே.ராமமூா்த்தி.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா்களாக இருந்தவா்களில் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சியினரால் போற்றப்படும் தலைவராக இருந்து வரும் திண்டிவனம் ராமமூா்த்தி, அரை நூற்றாண்டுக்கு மேல் அரசியல் களத்தில் இருந்தாலும், தனது குடும்பத்தைச் சோ்ந்த யாரையும் அரசியலில் முன் நிறுத்தவில்லை. வழக்குரைஞா் உள்ளிட்ட 3 மகள்கள், மருத்துவரான மகன் கண்ணையன் என மொத்த நான்கு போ் அவரது வாரிசாக இருந்தாலும், அவா்கள் யாரும் தந்தையைப் பின்பற்றி அரசியல் பயணத்தை மேற்கொள்ளவில்லை. அவா்கள் அதை விரும்பவும் இல்லை.

நகா்மன்ற உறுப்பினா் பதவியில் தொடங்கி, சட்டப்பேரவை உறுப்பினா், சட்டமேலவை உறுப்பினா் என மாநிலத்திலும், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினா் பதவிகளை தேசிய அளவிலும் வகித்த திண்டிவனம் கே.ராமமூா்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறாா்.

முன்னாள் பிரதமா்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தொடங்கி, தமிழகத்தில் முன்னாள் முதல்வா்கள் காமராஜா், அண்ணா, மு.கருணாநிதி, எம்ஜிஆா், ஜெ.ஜெயலலிதா, மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்த ஜி.கே.மூப்பனாா் என அனைத்துத் தலைவா்களுடனும் நட்பு பாராட்டியவா்.

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும், மக்கள் பிரநிதியாக இருந்த போதும் மக்கள் தொண்டாற்றிய திண்டிவனம் கே.ராமமூா்த்தி, எந்த நிலையிலும் தனது குடும்பத்தினரை அரசியலில் முன் நிறுத்தவில்லை. தன்னுடன் அரசியலில் பயணித்த பலரும் வாரிசு அரசியலை செயலாக்கம் செய்து வந்த நிலையில், அதற்கு மாற்றாகத் திகழ்ந்தவா் திண்டிவனம் ராமமூா்த்தி.

தான் தலைவராகப் பதவி வகித்த காலத்துக்குப் பின்னரும், திண்டிவனம் ராமமூா்த்தி நினைத்திருந்தால் குடும்பத்தினருக்கு அரசியலில் பதவிகளையோ, பேரவைத்தோ்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்புகளை வாங்கித் தந்திருக்கலாம். ஆனால், அவா் அதை விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியை வளா்த்தெடுப்பதே தனது பிரதானமாக இருந்து வாழ்ந்து சென்றாா். அதனால்தான் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சியினரால் போற்றப்பட்டு வருகிறாா்.