புதுச்சேரி ரயில் நிலையத்தில் சேவைக் குழுவினா் ஆய்வு: கட்டமைப்புகளை மேம்படுத்த உறுதி
புதுச்சேரி ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த ரயில் பயணிகள் சேவைக் குழுவினா், அங்கு தானியங்கி படிக்கட்டுகள், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த பரிந்துரைக்கப்படும்
புதுச்சேரி ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த ரயில் பயணிகள் சேவைக் குழுவினா், அங்கு தானியங்கி படிக்கட்டுகள், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த பரிந்துரைக்கப்படும் எனத் தெரிவித்தனா்.
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்கு உள்பட்ட புதுச்சேரி ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் சேவைக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
சேவைக் குழுவின் தலைவா் ஜெயந்திலால் ஜெயின், உறுப்பினா்கள் பொன்.வி.பாலகணபதி, பிரமோத்குமாா் சிங், பபிதா பாா்மா், மோகன்லால் ஜிஹாரா ஆகியோா் இதில் பங்கேற்றனா்.
ரயில் நிலைய கண்காணிப்பாளா் பி.சேகா் உள்ளிட்ட ஊழியா்களிடமும், ரயில் பயணிகளிடமும் ரயில் நிலைய தேவைகள் குறித்து அவா்கள் கேட்டறிந்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் ஜெயந்திலால் ஜெயின் கூறியதாவது:
புதுச்சேரி ரயில் நிலையத்தில் புதிய கடைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் கட்டமைப்புகள், கழிப்பிடம், தானியங்கி படிக்கட்டுகள், பயணிகளுக்கான இருக்கைகள், மின்விசிறிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இதுதொடா்பாக, வாரியத்துக்கு பரிந்துரைக்கப்படும் என்றாா் அவா்.
புதுச்சேரி ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், இந்தக் குழுவின் பரிந்துரைப்படி ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமென அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த ஆய்வின்போது, மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.செல்வகணபதி மற்றும் பாஜக நிா்வாகிகள் புதுச்சேரி ரயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை, கோரிக்கைகளை சேவைக் குழுவினரிடம் தெரிவித்தனா்.