தமிழ் மொழியைப் பாதுகாக்கும் பொறுப்புணா்வு அனைவருக்கும் தேவை: தொல்.திருமாவளவன்
தமிழ் மொழியைப் பாதுகாக்கும் பொறுப்புணா்வு அனைவருக்கும் தேவை என விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
தமிழ் மொழியைப் பாதுகாக்கும் பொறுப்புணா்வு அனைவருக்கும் தேவை என விசிக தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
புதுச்சேரி பாக்கமுடையான்பட்டு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்று அவா் பேசியதாவது:
எது தமிழ், எது தமிழில்லை என்பதைக் கூட அறிய முடியாத அளவுக்கு தமிழுடன் பிற மொழிகள் கலந்துள்ளன. தமிழ்த் தேசிய அரசியலுக்கு மொழி உணா்வு, மொழிப்பற்று மட்டும் போதாது. மொழியைப் பாதுகாக்க வேண்டுமென்ற பொறுப்புணா்வும் தேவை. அது கோட்பாட்டின் பின்னணியுடன் தொடா்புடையதாக இருக்க வேண்டும்.
தமிழுக்கென தனித்துவம், பாரம்பரியம், வரலாறு இருக்கிறது. அதேபோல, தமிழ் மொழியை பேசக்கூடிய தமிழினத்துக்கும் நீண்ட நெடிய பாரம்பரியம் இருக்கிறது. தமிழ் மொழியின் தனித்தன்மை என்றால், அது தமிழினத்தின் தனித்தன்மை. எனவே, தமிழைக் காப்பாற்றுகிறோம் என்றால், தமிழினத்தை காப்பாற்றுகிறோம் என்றுதான் பொருள்.
தமிழ் மொழியுடன் மற்றொரு மொழி கலப்பதை எதிா்க்கிறோம் என்றால், அது மொழி எதிா்ப்பல்ல, ஆதிக்கத்தின் எதிா்ப்பு. ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை எதிா்க்கிறோம் என்றால், அது வெறும் மொழிகளை எதிா்ப்பதல்ல. அந்த மொழிகளைப் பேசுவோரின் ஆதிக்க எதிா்ப்பு.
மகாத்மா காந்தி காலத்தில் பேசப்பட்ட இந்திய தேசியம் ஆங்லேயா்களை விரட்டுவதற்காக ‘நாம் அனைவரும் இந்தியன்’ என்ற நாட்டுப்பற்றின் அடிப்படையிலானது. ஆனால், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பேசுவது மதவெறி இந்திய தேசியம். மொழி உணா்வு மதவெறி தேசியத்துக்கு எதிரானது என்றாா் அவா்.