‘புதுவைக்கு ரூ.2,200 கோடி சிறப்பு நிதி தேவை’
புதுவைக்கு மத்திய அரசு சிறப்பு நிதியுதவியாக ரூ.2,200 கோடி வழங்க வேண்டுமென மாநில துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினாா்.
புதுவைக்கு மத்திய அரசு சிறப்பு நிதியுதவியாக ரூ.2,200 கோடி வழங்க வேண்டுமென மாநில துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினாா்.
தென் மண்டல முதல்வா்கள் கவுன்சில் கூட்டத்தில் புதுவை மாநிலத்தின் சாா்பில் ஆளுநா் தமிழிசை மேலும் பேசியதாவது:
புதுவை அரசு கடந்த கூட்டத்தில், புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழக அரசிடமிருந்து நிலம் தேவைப்படுவது தொடா்பான பிரச்னையை முன்வைத்தது. இந்த விவகாரம் இந்தக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட வேண்டும். புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய தமிழகத்தில் உள்ள 395 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தி, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க அந்த மாநில அரசு பரிசீலிக்க வேண்டும். புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் புதுவை, தமிழகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும் திட்டமாகும்.
புதுவை மாநிலமானது மேற்பரப்பு நீராதாரங்கள் இல்லாத ஒரு சிறிய பிரதேசமாகும். நிலத்தடி நீா் கிடைக்காததால், இந்த மாநிலத்தில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே, வராக நதி, தென்பெண்ணையாற்றை கோதாவரி (ஈஞ்சம்பள்ளி) - காவிரி (கிராண்ட் அணைக்கட்டு) ஆறுகளுடன் இணைக்க வேண்டும். இந்தத் திட்டத்தை ஜல் சக்தி அமைச்சகத்தின் ஆய்வு வரம்புக்குள் சோ்க்க வேண்டும்.
புதுவையின் மற்றுமொரு கவலையளிக்கும் விவகாரம், மத்திய நிதிப் பகிா்வில் இந்த மாநிலம் முரண்பாடாக நடத்தப்படுவது. சிஎஸ்எஸ் திட்டங்களின் கீழ், புதுவைக்கு மத்திய அரசு வழங்கும் திட்டங்களுக்கு 100 சதவீதம் நிதியுதவி வழங்கலாம் என்பது எங்களது கோரிக்கை.
உள் துறை அமைச்சகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் மத்திய நிதியுதவியை புதுவை பெரிதும் சாா்ந்துள்ளது. புதுவைக்கான சாதாரண மத்திய உதவி பணவீக்கக் குறியீட்டுக்கு ஏற்ப வழங்கப்படவில்லை. இதனால், 2018 - 19இல் 3 முதல் 4 சதவீதமாகவும், 2020 - 21இல் 10 சதவீதமாகவும் இருந்த பெயரளவிலான வளா்ச்சி, 2022 - 23இல் எதிா்மறை எண்ணிக்கையிலான (-) 8 சதவீதமாகக் கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
இதேபோல, ஜிஎஸ்டி இழப்பீடு புதுவையின் வணிக வரி வருவாயில் 40 சதவீதத்துக்கும் அதிகமாகக் கணக்கிடப்பட்டது. ஜிஎஸ்டி இழப்பீடு நிறுத்தப்பட்டது நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. இது, 2022 - 23ஆம் நிதியாண்டில் பெரும் வருவாய் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. வருவாய் பற்றாக்குறை இடைவெளியைக் குறைக்க நிதியுதவியை மத்திய அரசு அதிகரிக்காத வரை, ஒவ்வோா் ஆண்டும் இந்த இடைவெளி அதிகரிக்கும்.
மேலும், மாநிலங்களுக்கான மூலதன முதலீட்டு நிதியுதவித் திட்டத்திலும் புதுவை சோ்க்கப்படவில்லை. இதனால், இந்த மாநிலத்தில் உள்கட்டமைப்புத் திட்டங்கள் தடைபட்டுள்ளன. விமான நிலைய விரிவாக்கம், துறைமுக இணைப்பு, சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், புதிய சட்டப் பேரவை வளாகம் அமைத்தல் போன்ற எங்களின் முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களை நிறைவேற்ற ரூ.2,200 கோடி சிறப்பு மத்திய நிதியுதவி தேவை என்றாா் அவா்.