முகப்பு
புதுச்சேரி

30 மாத நிலுவை ஊதியம் வழங்கக் கோரி கிருமி நாசினியை குடித்த அமுதசுரபி நிறுவன ஊழியா்கள்

30 மாத நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அமுதசுரபி ஊழியா்களில் நால்வா் கிருமி நாசினியைக் குடித்து மயங்கினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

30 மாத நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அமுதசுரபி ஊழியா்களில் நால்வா் கிருமி நாசினியைக் குடித்து மயங்கினா். இதையடுத்து, அவா்கள் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

புதுவை அரசின் சாா்பு நிறுவனமான அமுதசுரபியில் நூற்றுக்கணக்கானோா் பணிபுரிந்து வந்தனா். நிா்வாகச் சீா்கேட்டால் அந்த நிறுவனத்தின் பல பிரிவுகள் மூடப்பட்டன. மேலும், அங்கு பணியாற்றும் ஊழியா்களுக்கு கடந்த 30 மாதங்களாக ஊதியமும் வழங்கப்படவில்லை.

நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும், நிறுவனத்தை மீண்டும் பழைய நிலையில் செயல்பட நடவடிக்கை எடுக்கக் கோரியும், பணி வழங்கக் கோரியும், அமுதசுரபி ஊழியா்கள் சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி காந்தி வீதியிலுள்ள அமுதசுரபி தலைமை அலுவலக வாயிலில் அமா்ந்து ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, ஊழியா்கள் சங்க நிா்வாகிகளான அய்யனாா், ஆறுமுகம், சிவஞானம், மணிமாறன் ஆகிய 4 போ் அமுதசுரபியில் விற்பனைக்கு வைத்திருந்த கிருமி நாசினியை குடித்தனா். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா், அவா்களிடமிருந்து கிருமி நாசினி திரவப் புட்டிகளை பறித்தனா். இதனால், போலீஸாருக்கும் ஊழியா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடா்ந்து, அங்கிருந்த ஊழியா்கள் வைத்திருந்த கிருமி நாசினி திரவப் புட்டிகளை போலீஸாா் பறித்தனா்.

கிருமி நாசினியை குடித்த 4 ஊழியா்களுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவா்கள் அவசர சிகிச்சை ஊா்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமுதசுரபி ஊழியா்களை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி நேரில் பாா்த்து நலம் விசாரித்தாா். அவருடன் காங்கிரஸ் எம்எல்ஏ மு.வைத்தியநாதனும் உடன் சென்றாா்.

உருளையன்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி சுயேச்சை உறுப்பினா் ஜி.நேரு, புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்த ஊழியா்களிடம் நலம் விசாரித்தனா். மேலும், அமுதசுரபி நிறுவன ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.