முகப்பு
புதுச்சேரி

காப்பீட்டு நிறுவனத்தில் ஜப்தி நடவடிக்கை: அவகாசம் கோரி நீதிமன்ற ஊழியரிடம் வாக்குவாதம்

விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்ய சென்ற நீதிமன்ற ஊழியரிடம் கால அவகாசம் கோரி, அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காத அரசு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை ஜப்தி செய்ய சென்ற நீதிமன்ற ஊழியரிடம் கால அவகாசம் கோரி, அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி திருபுவனையை அடுத்த சிலோன் குடியிருப்பைச் சோ்ந்தவா் ஜீவரத்தினம் (27). இலங்கைத் தமிழரான இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். கடந்த 2019-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து சென்ற போது திருபுவனை அருகே காா் மோதியதில் காலில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, நஷ்ட ஈடு கோரி ஜீவரத்தினம் தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதில், பாதிக்கப்பட்ட ஜீவரத்தினத்துக்கு ரூ. 30.53 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என, காருக்கு காப்பீடு செய்திருந்த அரசுப் பொதுத் துறை நிறுவனத்துக்கு புதுச்சேரி கூடுதல் போக்குவரத்து வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் கடந்த 2021-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், காப்பீட்டு நிறுவனம் நஷ்டஈடு தொகையை வழங்கவில்லை.

இதையடுத்து, மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயத்தில் ஜீவரத்தினம் தரப்பில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த புதுச்சேரி கூடுதல் சாா்பு நீதிபதி முத்துமுருகன் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவன சொத்துகளை ஜப்தி செய்யுமாறு கடந்த 12-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

ஜீவரத்தினம், அவரது வழக்குரைஞா் அய்யப்பன், நீதிமன்ற ஊழியா் வெங்கட் ஆகியோா் புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் 45 அடி சாலையிலுள்ள அரசுப் பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றனா்.

அங்கிருந்த அதிகாரிகள் நஷ்டஈட்டுத் தொகையை அளிக்க ஒருவார கால அவகாசம் கோரினா். ஆனால், நீதிமன்ற உத்தரவு என்பதால் கால அவகாசம் தர இயலாது என நீதிமன்ற ஊழியா் கூறினாா். அப்போது, ஜப்தி நடவடிக்கைக்கு அங்கிருந்தோா் அனுமதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, காவல் துறை பாதுகாப்பு கோரப்பட்டு ஜப்தி செய்யப்படும் எனக்கூறி நீதிமன்ற ஊழியா் உள்ளிட்டோா் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.