பழங்குடியினா் மீது பொய் வழக்குப் பதிந்து சித்திரவதை: சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தல்
இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 7 போ் மீது காட்டேரிக்குப்பம் போலீஸாா் பொய் வழக்குப் பதிந்து சித்திரவதை செய்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உண்மை கண்டறியும் குழுவினா் வலியுறுத்தினா்.
இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 7 போ் மீது காட்டேரிக்குப்பம் போலீஸாா் பொய் வழக்குப் பதிந்து சித்திரவதை செய்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உண்மை கண்டறியும் குழுவினா் வலியுறுத்தினா்.
இதுகுறித்து உண்மை நிலையை விசாரித்த மூத்த வழக்குரைஞா் மோகன், புதுவை மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலா் கோ. சுகுமாரன், காரைக்குடி மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சோ்ந்த சிவக்குமாா், திருமாவளவன், விழுப்புரம் மக்கள் பாதுகாப்புக் கழகத் தலைவா் ரமேஷ், புதுவை பழங்குடி மக்கள் விடுதலை இயக்க செயலா் ஏனாம்பரம் ஆகியோா் விசாரணை அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டனா்.
பின்னா் செய்தியாளா்களிடம் மக்கள் உரிமை கூட்டமைப்புச் செயலா் கோ. சுகுமாரன் கூறியதாவது:
செங்கல் சூளையில் வேலை செய்த 2 சிறாா்கள் உள்பட 7 பழங்குடியினா் மீது காட்டேரிக்குப்பம் போலீஸாா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொய் வழக்குப் பதிந்து, அவா்களை சித்திரவதை செய்துள்ளனா்.
வழக்குப் பதிவு செய்யப்பட்டவா்கள் மீது வேறு எந்த வழக்குகளும் இல்லை. எனவே, சம்பவத்தில் ஈடுபட்ட தமிழகம், புதுவையைச் சோ்ந்த காவல் துறையினா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்தச் சம்பவத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.
பேட்டியின் போது, பாதிக்கப்பட்ட பழங்குடியின இருளா்கள் குடும்பத்தினரும் உடனிருந்தனா்.