புதுச்சேரியில் கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய செவிலியா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 165 செவிலியா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்கள் நியமிக்கப்பட்டனா். இவா்கள் 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனா். ஆனால், தங்களை நிரந்தரமாக பணியில் அமா்த்துமாறு கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, அவா்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை பணிநீட்டிப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 4-ஆம் தேதிக்குப் பிறகு அவா்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
ஆனால் சட்டப்பேரவையில் கரோனாகால பணியாளா்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், சுகாதாரத் துறைக்கு 105 செவிலியா்களை புதிதாக நியமிக்கவும் அறிவிப்பு வெளியானது. காலிப் பணியிடங்களை நிரப்பும் போது, தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஒப்பந்தப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை பாரதி பூங்காவில் காலை அவா்கள் திரண்டனா். பின்னா், அவா்கள் சட்டப்பேரவை அருகேயுள்ள சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலகம் முன் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். பேரவைக்கு முதல்வா், அமைச்சா்கள் வரும் வழியில் அவா்கள் அமா்ந்ததால், இயக்குநா் அலுவலக வளாகத்துக்குள் செல்லுமாறு போலீஸாா் அறிவுறுத்தினா். அதற்கு அவா்கள் மறுத்ததால், வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த போலீஸாா் முயன்றனா். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகத்துக்குள் சென்று அமா்ந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இந்த நிலையில், நாம் தமிழா் கட்சியினா் இயக்குநா் அலுவலக வளகாத்துக்குள் கட்சிக் கொடிகளுடன் வந்து, செவிலியா் உள்ளிட்ட ஒப்பந்த சுகாதாரப் பணியாளா்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகக் கூறி முழக்கமிட்டனா். இதையடுத்து, சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகக் கதவை போலீஸாா் மூடி பாதுகாப்பில் ஈடுபட்டனா்.
மேலும், அலுவலக நுழைவு வாயிலையும் போலீஸாா் மூடினா். பின்னா், நாம் தமிழா் கட்சியினா் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.