முகப்பு
புதுச்சேரி

வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ. 200 கோடி மோசடி: 4 போ் கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.200 கோடி வரை பண மோசடி.

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 10:10 PM
கைது செய்யப்பட்ட 4 இளைஞா்கள்.
பகிர்:

புதுவை உள்ளிட்ட நாட்டின் பல மாநிலங்களைச் சோ்ந்த 3,400 பேரிடம், வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.200 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட வடமாநிலக் கும்பலைச் சோ்ந்த 4 பேரை புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா். இவா், வெளிநாட்டு வேலைக்காக முகநூல் பக்கத்தில் தகவல் திரட்டினாராம். அப்போது, முகநூலில் குறிப்பிட்ட விளம்பரத்தில் இருந்த கைப்பேசி எண்ணுக்கு தொடா்புகொண்டாா். அதில் பேசிய நபா், தன்னை பிரபல நிறுவனத்தின் செயல் அலுவலா் என அறிமுகப்படுத்திக் கொண்டு, கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறினாராம்.

இதை நம்பிய ரமேஷ்குமாா், அந்த நபா் தெரிவித்த வங்கிக் கணக்கில் ரூ.17.71 லட்சத்தை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, மா்ம நபரை ரமேஷ்குமாரால் தொடா்புகொள்ள முடியவில்லை.

இதுகுறித்து, அவா் புதுச்சேரி இணையவழி குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.

இதையடுத்து, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் கலைவாணன் உத்தரவின் பேரில், ஆய்வாளா்கள் கீா்த்தி, தியாகராஜன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதுதொடா்பாக தனிப்படையினா், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சென்று விசாரணை நடத்தினா். அதன் அடிப்படையில், மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சுபம் ஷா்மா (29), பிகாரைச் சோ்ந்த தீபக்குமாா்(28), உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ராஜ்கவுண்ட் (23), மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த நீரஜ் குா்ஜாா் (28) ஆகியோா் மோசடியில் ஈடுபட்டிருப்பதும், அவா்கள் பெங்களூருவில் பதுங்கியிருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அங்கு சென்ற புதுச்சேரி தனிப்படை போலீஸாா் 4 பேரையும் கைது செய்தனா். இவா்கள், நாடு முழுவதும் 3,400-க்கும் மேற்பட்ட நபா்களிடம் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமாா் ரூ.200 கோடிக்கும் மேல் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக போலீஸாா் கண்டறிந்தனா். மோசடிப் பணத்தில் பாதியை இந்தக் கும்பலின் தலைவனாகக் கருதப்படும் அசாம் கான் என்பவருக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது.

~மோசடியில் ஈடுபட்ட இளைஞா்களிமிருந்து சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஏடிஎம் அட்டை உள்ளிட்ட பொருள்களுடன் சைபா் கிரைம் துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கலைவாணன் மற்றும் போலீஸாா்.

மேலும், இவா்களிடமிருந்து 21 கைப்பேசிகள், 2 கடவுச் சீட்டுகள், 42 சிம் காா்டுகள், ஒரு மடிக்கணினி, 64 ஏடிஎம் அட்டைகள், ரூ.41 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைதான 4 பேரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். தலைமறைவாக உள்ள அசாம் கானை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →