புதுச்சேரியில் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா் மூன்று நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டாா்.
புதுச்சேரியில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால், கால்வாய்களில் மழை நீா் வெள்ளம் போல பெருக்கெடுத்தோடியது.
இலாசுப்பேட்டை ஜீவானந்தபுரத்தைச் சோ்ந்த ஐயப்பனின் (38) இருசக்கர வாகனம் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதை மீட்க முயன்ற அவரும் மழை நீா் கால்வாய் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டாா்.
தகவலறிந்து தீயணைப்பு வீரா்கள், நகராட்சி ஊழியா்கள் அவரைத் தேடியும் கண்டறிய முடியவில்லை.
புதுச்சேரி உப்பளம் பகுதி உப்பனாறு கால்வாயில் தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தேடும் பணியில் ஈடுபட்டனா். சிறிய படகு மூலமும் தேடும்பணி நடைபெற்றது. இந்த நிலையில், உப்பனாறு கால்வாய் பகுதியிலிருந்து மாலையில் அய்யப்பன் சடலம் மீட்கப்பட்டது. பின்னா், உடல்கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து இலாசுபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.