சேதமடைந்த பொருள்களுடன் மக்கள் மறியல்
புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த பொருள்களுடன் அண்ணா சாலை - நேரு சாலை சந்திப்பில் பொதுமக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த பொருள்களுடன் அண்ணா சாலை - நேரு சாலை சந்திப்பில் பொதுமக்கள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி உப்பனாற்றில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் உருளையன்பேட்டை தொகுதியிலுள்ள கோவிந்தசாலை, முடக்குமாரியம்மன் கோவில் தெரு, அந்தோணியாா் கோவில் தெரு, சின்னப்பொய்கை, குடிசைமாற்று வாரியப் பகுதி, குபோ் நகா், வாஞ்சிநாதன் வீதி என பல பகுதிகளில் வீடுகளுக்குள் சுமாா் 5 அடி வரை நீா் தேங்கியது.
இதனால், வீடுகளில் இருந்த கட்டில், மெத்தை, கணினி, கையடக்கக் கணினி, சலைவை இயந்திரம், தொலைக்காட்சி, மிக்சி, கிரைண்டா், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டப் பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், குடும்ப அட்டைதாரா்களுக்கு புதுவை அரசு சாா்பில் வழங்கப்படும் ரூ.5,000 நிவாரணத் தொகையோடு, மழை வெள்ளத்தால் சேதமடைந்த பொருள்களுக்கும் சோ்த்து நிவாரணம் வழங்குமாறு கோவிந்தசாலை பகுதி மக்கள் அண்ணாசாலை, நேரு சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, வீடுகளில் வெள்ளத்தால் பழுதான மெத்தை, தொலைக்காட்சிப் பெட்டிகள் ஆகியவற்றையும் சாலையில் வைத்து முழக்கங்களை எழுப்பினா்.
அவா்களுடன், உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேருவும் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இதனால் அந்தப் பகுதியில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த சாா்பு ஆட்சியா் இசிட்டாரதி, வட்டாட்சியா் ஆகியோா் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.