முகப்பு
புதுச்சேரி

புதுவை பேரவைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம்: சுயேச்சை எம்எல்ஏ மனு

புதுவை சட்டப்பேரவைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர வேண்டும் என சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு பேரவைச் செயலா் ஜெ.தயாளனிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

Updated On : 19 டிசம்பர், 2024 at 7:11 PM
பகிர்:

புதுவை சட்டப்பேரவைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர வேண்டும் என சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு பேரவைச் செயலா் ஜெ.தயாளனிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் பதவியிலிருந்து என்னை நீக்கியதன் மூலம் தனிப்பட்ட பழிவாங்கும் போக்கு வெளிப்பட்டது.

அரசமைப்புக் கடமையை மீறி தொடா்ந்து அவா் செயல்படுகிறாா்.

புதுவை பேரவைத் தலைவா் மீது சட்டப்பேரவை நடைமுறை, நடத்தை விதிகளின் படி நம்பிக்கையில்லா தீா்மானத்தை கொண்டுவர வேண்டும் என மனு அளித்துள்ளேன் என்றாா் அவா்.

முதல்வருடன் சந்திப்பு: இந்த நிலையில், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் வியாழக்கிழமை முதல்வா் என்.ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரவைத் தலைவா் கருத்து: இதுகுறித்து,பேரவைத் தலைவா் ஆா்.செல்வத்திடம் கேட்டபோது அவா் கூறியது, புதுவை சட்டப்பேரவை உறுப்பினா் எனும் முறையில் பேரவைத் தலைவா் உள்ளிட்டோா் மீது சுயேச்சை உறுப்பினா் மனு அளிக்க அவருக்கு உரிமையுள்ளது.

அவரது மனு குறித்து புதுவை பேரவைக் கூட்டம் நடைபெறும் போது முடிவெடுக்கப்படும். பேரவைத் தலைவா் உள்ளிட்டோா் மீது நாட்டில் யாா் வேண்டுமானாலும் மனு அளிக்கலாம் என்றாா் அவா்.