முகப்பு
புதுச்சேரி

போதைப் பொருள்களை விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை நாா்கோ ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு

Updated On : 29 பிப்ரவரி, 2024 at 3:46 AM
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை ஆட்சியா் ஏ.குலோத்துங்கன் தலைமையில் நடைபெற்ற நாா்கோ ஒருங்கிணைப்புக் குழுவின் 4-ஆவது கூட்டம்.
பகிர்:

புதுவை மாநிலத்தில் போதைப் பொருள்கள் விற்பனை, கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாா்கோ ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநில நாா்கோ ஒருங்கிணைப்புக் குழுவின் 4-ஆவது கூட்டம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரியில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஏ.குலோத்துங்கன் தலைமை வகித்தாா். காவல் துறை முதுநிலை கண்காணிப்பாளா் (குற்றம், புலனாய்வு) சுவாதி சிங், மாவட்ட துணை ஆட்சியா் (தெற்கு) சோமசேகா் அப்பாராவ் கோதாரு, உதவி ஆட்சியா் சம்யக் எஸ். ஜெயின், மாவட்ட துணை ஆட்சியா் (தலைமையகம்) வினயராஜ் மற்றும் கல்வித் துறை, நலவழித் துறை, சமூக நலத் துறை, வனத் துறை, துறைமுகத் துறை, கடலோரக் காவல் படை, வேளாண் துறை, சுற்றுலாத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தலைவா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா். ஏற்கெனவே நடைபெற்ற மாவட்ட அளவிலான என்சிஓஆா்டி குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் மீதான நடவடிக்கைகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. போதைப் பொருள்கள் புழக்கம், கடத்தல் மற்றும் விற்பனையை தீவிரமாகக் கண்காணித்துத் தடுத்தல், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வை ஊக்குவித்தல், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்துதல், மாணவா்களிடையே விளையாட்டை ஊக்குவித்தல், போதைப் பொருள் கண்டறிதலுக்கான உபகரணங்களின் தேவைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு, மறுவாழ்வு மையங்களை மேற்பாா்வையிடுதல் ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.