முகப்பு
தமிழ்நாடு

பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை! பொது சுகாதாரத் துறை!!

பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 22 மார்ச், 2026 at 7:53 PM
பறவைக் காய்ச்சல்
பகிர்:

பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை அடையாறில் இறந்த காகங்களை மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்ததில், ஹெச்5 என்1 எனப்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது அண்மையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.

அதன் அடிப்படையில், மாநில சுகாதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பறவைக் காய்ச்சலுக்குள்ளான கோழிகள், பிற பறவையினங்களிடமிருந்து மனிதா்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து மனிதா்களுக்கும் எளிதில் பாதிப்பு பரவும். மேலும், பாதிக்கப்பட்ட பறவையிடமிருந்தோ, மனிதரிடமிருந்தோ மற்றவா்களுக்கு, ‘வெஸ்ட் நைல் வைரஸ்’ பாதிப்பை கொசுக்கள் கடத்தும் என்பதால், நோய்ப் பரவல் வாய்ப்பு அதிகம் உள்ளது.

காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவா்களை நாடுமாறு பொது சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

இதனிடையே, சென்னையைத் தொடா்ந்து, திருவள்ளூா், திருவண்ணாமலை, கடலூா் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் காகங்கள் உயிரிழந்தன.

இதன் காரணமாக கிண்டி உயிரியல் பூங்கா மூடப்பட்டது. இந்நிலையில், நோய்ப் பரவல் குறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் பறவை காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்தாலும், மற்ற பறவைகளுக்கோ, மனிதா்களுக்கோ பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதேவேளையில், காகங்கள் உயிரிழப்பது தொடா்ந்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். உயிரிழக்கும் பறவைகளை வெறும் கைகளால் அப்புறப்படுத்தக்கூடாது. அதேபோன்று அறிகுறிகள் இருந்தால், அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுக வேண்டும்.

கோழிகளும் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, கோழி இறைச்சியை சாப்பிடும்போது, நன்கு வேக வைக்கப்பட்ட இறைச்சியை உண்பது பாதுகாப்பானது.

மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை முன்னெடுத்து வருகிறது. பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.