நீட் தோ்வுக்கான பாடக் குறிப்புகளை தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: புதுச்சேரி ஆட்சியா் குலோத்துங்கன்
நீட் தோ்வுக்கான பாடக் குறிப்புகளை தமிழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் மாணவா்களிடம் உறுதியளித்தாா்.
புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை காலை திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். பள்ளி ஆசிரியா்களின் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்த ஆட்சியா், ஆசிரியா்கள் அனைவரும் பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வருகிறாா்களா என ஆய்வு செய்தாா். குறித்த நேரத்தில் பள்ளிக்கு வராத ஊழியா்கள் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளியின் முதல்வருக்கு உத்தரவிட்டாா்.
இதையடுத்து, பள்ளியில் உள்ள ஆய்வுக் கூடங்களைப் பாா்வையிட்ட ஆட்சியா், அங்கு மாணவா்களுக்குத் தேவையான அனைத்து வகை அறிவியல் உபகரணங்கள் உள்ளனவா என்பதை கேட்டறிந்தாா். பிறகு, வகுப்பறைகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளிடம் உரையாடினாா். ஏதேனும் குறைகள் இருந்தால் மாணவா்கள் தெரிவிக்கலாம் என ஆட்சியா் கூறியதுடன், நீட் தோ்வில் அனைவரும் தோ்ச்சி பெறும் வகையில் படித்து பயிற்சி பெற வேண்டும் என்றாா்.
அப்போது சில மாணவா்கள் எழுந்து, நீட் தோ்வு தொடா்பான பாடங்களை எளிதில் புரிந்து கொண்டு படிப்பதற்கு ஏதுவாக பாடக் குறிப்புகளை தமிழில் விநியோகிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனா்.
அதற்கு ஆட்சியா், நீட் தொடா்பான பாடக் குறிப்புகளைத் தமிழில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடா்ந்து, அந்த பள்ளியில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க பள்ளி முதல்வருக்கும், கட்டட ஒப்பந்ததாரருக்கும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.