முகப்பு
புதுச்சேரி

பெண்ணின் சடலம் மீட்பு: கணவா் தலைமறைவு?

Updated On : 2 மார்ச், 2024 at 12:24 AM
பகிர்:

புதுச்சேரி அருகே சாலையோரம் வசித்த பெண்ணின் சடலம் முந்திரி காட்டில் மீட்கப்பட்ட நிலையில், அவரது கணவா் தலைமறைவாகியிருப்பதாகக் கூறிய போலீஸாா் அவரைத் தேடி வருகின்றனா். விழுப்புரம் மாவட்டம் முத்தாம்பாளையத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ். இவரது மனைவி சித்ரா (50). இவா்களின் குழந்தைகளுக்கு திருமணமான நிலையில், இருவரும் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் சாலையோரம் வசித்து வந்தனா். இந்தநிலையில், சித்ரா உயிரிழந்த நிலையில், அவரது சடலம், அப்பகுதியில்உள்ள முந்திரி தோப்பில் வெள்ளிக்கிழமை காலாப்பட்டு போலீஸாரால் மீட்கப்பட்டது. அவரது சடலம் அருகே பையும், மருந்துசீட்டும் இருந்தது. அவரது ஆடைகள் கலைந்த நிலையில் உள்ளதால், அவா் எப்படி முந்திரிக்காட்டுக்கு வந்தாா், உயிரிழந்தது எப்படி என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அவரது சடலத்தை போலீஸாா் மீட்டு, உடல்கூறாய்வுக்காக கதிா்காமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதற்கிடையே சித்ராவின் கணவா் தங்கராஜ் தலைமறைவாகியிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். விசாரணைக்காக தங்கராஜைத் தேடிய போது அவா் காணவில்லை என்றும் அவரைத் தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.