தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது பதவியை ராஜிநாமா செய்தவதாக குடியரசுத் தலைவருக்கு திங்கள்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
அதேபோல், தமிழகத்திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 39 தொகுதிகளிலும் களம் காண்கிறது.
இந்த தேர்தலில் போட்டியிட தமிழிசை செளந்தரராஜன் பாஜக தலைமையில் விருப்பம் தெரிவித்தாக சில நாள்களுக்கு முன் தகவல் வெளியானது.
தற்போது மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பதவியை ராஜிநாமா செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு தமிழிசை கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில், புதுச்சேரி, திருநெல்வேலி, தூத்துக்குடி அல்லது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓரிரு நாள்களில் தமிழகம் மற்றும் புதுவையில் போட்டியிடும் பாஜக கூட்டணியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட்டு திமுக கனிமொழியிடம் தோல்வி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2019 செப்டம்பரில் தெலங்கானா ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றார். பின்னர், புதுவை துணைநிலை ஆளுநராக 2021-ல் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.