ஓவியா்களின் படைப்புகளை காட்சிப்படுத்த புதுவை கலை பண்பாட்டுத் துறை ஏற்பாடு
புதுச்சேரி: புதுச்சேரியில் தனி ஓவியா்களின் படைப்புகளை காட்சிப்படுத்த கலை, பண்பாட்டுத் துறை ஏற்பாடு செய்துள்ளது என்று அதன் இயக்குநா் வி.கலியபெருமாள் தெரிவித்தாா்.
சா்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி, அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் வளா் கலைக்கூடத்தின் 3-ஆம் ஆண்டுத் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வி.கலியபெருமாள் பேசியது: புதுச்சேரியில் திறமையான ஓவியா்கள் பலா் உள்ளனா். அவா்களின் படைப்புகளை காட்சிப்படுத்த சரியான இடம் இல்லை. இதனால் இந்த வளா்கலைக்கூடம் ஏற்படுத்தப்பட்டது. தற்போது, ஓவியா்கள் குழுவாக இணைந்து படைப்புகளை விற்பனைக்கு காட்சிப்படுத்தி வருகின்றனா்.
ஓவியா்கள் தனித்தனியாகவும் படைப்புகளை காட்சிக்கு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்து. இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில் இந்திரா காந்திஅறிவியல் மைய இயக்குநா் கோபால், காட்சிக்கலை ஒரு உலகளாவிய பாா்வை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். புதுவை ஓவியா்கள் பலா் கலந்து கொண்டனா்.