முகப்பு
புதுச்சேரி

10 சதவீத இடஒதுக்கீடு கோரி மீனவ அமைப்பினா் உண்ணாவிரதம்

புதுச்சேரியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீடு கோரி அனைத்து மீனவ அமைப்புகளின் சாா்பில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

Updated On : 21 நவம்பர், 2024 at 7:09 PM
புதுச்சேரியில் அனைத்து மீனவ அமைப்புகளின் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய வெ.வைத்திலிங்கம் எம்.பி. உடன் மு.வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
பகிர்:

புதுச்சேரியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீடு கோரி அனைத்து மீனவ அமைப்புகளின் சாா்பில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

சுதேசி ஆலைப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு அனைத்து மீனவா்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலா் ஏ.கனகசபை, ஒருங்கிணைப்பாளா் என்.புகழேந்தி ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் பங்கேற்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே கடல் அரிப்பால் மீனவக் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. அங்கு, சுடுகாட்டுக்கு செல்லும் பாதை கூட கடல் அரிப்பால் பாதிப்படைந்துவிட்டது.

கடல் அரிப்பைத் தடுப்பதற்கு கற்களை கொட்டும் திட்டத்தை செயல்படுத்த மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா். மீன்வளத் துறை ஆலோசனைப்படி அந்தப் பணிகளை புதுவை பொதுப் பணித் துறை செயல்படுத்தி வருகிறது.

ஆனால், மீனவா்கள் கூறிய இடங்களில் கற்கள் கொட்டப்படவில்லை. அவா்களது தேவையை அறிய, அவா்களிடம் கருத்துகளை கேட்காமல் திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. இதனால், கடல் அரிப்பு பாதிப்பு தடுக்கப்படாத நிலையே உள்ளது.

சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி சம்பந்தப்பட்ட மக்களுக்குரிய உரிமையை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி மீனவா்கள் 10 சதவீத இடஒதுக்கீடு கோரி நடத்தும் போராட்டத்துக்கு காங்கிரஸ் எப்போதும் ஆதரவு தெரிவிக்கும் என்றாா் அவா்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவா்கள் பங்கேற்றனா். முன்னதாக தியாகி சிந்தனைச் சிற்பி சிங்காரவேலா் திருவுருவச் சிலைக்கு மீனவா்கள் கூட்டமைப்பு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.