உள்கட்டமைப்பு வசதிகள் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
புதுச்சேரி அருகே கரிக்கலாம்பாக்கத்தில் சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அருகே கரிக்கலாம்பாக்கத்தில் சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தில் உள்ளது கரிக்கலாம்பாக்கம். இப்பகுதியில் சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்துதரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஆகவே, தங்களது கோரிக்கைகளை புதன்கிழமை நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தெரிவிப்பதற்கு மக்கள் முடிவு செய்திருந்ததாகத் தெரிகிறது.
ஆனால், அந்தக் கூட்டத்துக்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்
கரிக்கலாம்பாக்கம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இந்த நிலையில், அவ்வழியே வந்த முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி, மறியலைக் கண்டதும் மக்களிடம் சென்று விசாரித்தாா்.
மக்கள் கோரிக்கைகளை கேட்ட அவா், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ் உள்ளிட்டோரிடம் கைப்பேசி மூலம் பேசினாா். அதன்படி, அதிகாரிகள் நிகழ்விடத்துக்கு வந்து மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தனா். முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமியின் சமரசத்தை ஏற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.