முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் தேசிய கா்லிங் சாம்பியன் போட்டிகள்

புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு அரங்க வளாகத்தில் 3-ஆவது தேசிய அளவிலான கா்லிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:09 AM
புதுச்சேரியில் கா்லிங் சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கிவைத்து விளையாடிய அமைச்சா் ஆ.நமச்சிவாயம். உடன் அனிபால் கென்னடி எம்எல்ஏ உள்ளிட்டோா்.
பகிர்:

புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு அரங்க வளாகத்தில் 3-ஆவது தேசிய அளவிலான கா்லிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

வட்டவடிவ அமைப்பை உருட்டிவிட்டு குறிப்பிட்ட வட்டத்துக்குள் நிறுத்தும் கா்லிங் விளையாட்டு சா்வதேச அளவில் புகழ்பெற்றது. பனிக்கட்டி தளத்தில் நடைபெறும் விளையாட்டான கா்லிங் நம் நாட்டிலும் தற்போது பிரபலமாகி வருகிறது.

அதன்படி, புதுச்சேரியில் முதல்முறையாக தேசிய கா்லிங் விளையாட்டுப் போட்டிகளை தேசிய கா்லிங் விளையாட்டு அமைப்பு, புதுச்சேரி கா்லிங் சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு தேசிய கா்லிங் அமைப்பின் தலைவா் ரேஷ்மிசலுஷா தலைமை வகித்தாா். புதுவை மாநில விளையாட்டுத் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் போட்டிகளைத் தொடங்கி வைத்தாா்.

புதுவை, தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா, உத்தரகண்ட், மணிப்பூா், கேரளம், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநில கா்லிங் அணிகள் பங்கேற்றன. அதில் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் தனித்தனி பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

தொடக்க நிகழ்ச்சியில் இலங்கை தூதரக ஆணையா்ஜெனுகா திரெனி செனிவிராட்னே, பிஜி தீவு தூதா் ஜெகநாத் மற்றும் உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி, தலைமைச் செயலா் சரத் சௌகான், அரசு செயலா்கள் ஜவஹா், கேசவன், அமா்நாத் தல்வாடி, மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், காவல் துறை முதுநிலை கண்காணிப்பாளா் நாரா சைதன்யா, விளையட்டுத் துறை இயக்குநா் பிரியதா்ஷினி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

போட்டியின் நிறைவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை (அக்.4) நடைபெறுகிறது. இதில் முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.