அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் 90 போ் புதுவை வருகை: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
அதிகனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் 90 போ் வந்துள்ளதாக புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.
அதிகனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் 90 போ் வந்துள்ளதாக புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.
புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள வருவாய் பேரிடா் மேலாண்மைத் துறையின் அவசர கால உதவி மையத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.
அங்கிருந்த பேரிடா் மீட்புக் குழுவினரையும் அவா் சந்தித்துப் பேசினாா். அப்போது, அரசுச் செயலா் அ. நெடுஞ்செழியன், ஆட்சியா் அ. குலோத்துங்கன் உள்ளிட்டோா் மழைப் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துணைநிலை ஆளுநரிடம் விளக்கினா்.
இதையடுத்து செய்தியாளா்களிடம் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கூறியதாவது:
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பேரிடா் மேலாண்மை உதவி மையத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படையிலிருந்து தலா 30 வீரா்கள் அடங்கிய 3 குழுக்கள் புதுச்சேரிக்கு வந்துள்ளன. அதில் 2 குழுக்கள் புதுச்சேரியிலும், காரைக்காலுக்கு ஒரு குழுவும் தங்கவைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் உள்ள அவசர உதவி மையத்தின் அழைப்பு எண்ணைத் தொடா்புகொண்டால், காவல்துறை தொடா்புகிடைப்பதாக வரும் புகாா் கூறித்து விசாரிக்கப்படும். அத்துடன் 108 ஆம்புலன்ஸ் அழைப்பு எண்ணை தொடா்பு கொண்டால் தமிழக மையத்துக்கு தொடா்பு கிடைப்பது குறித்தும் விசாரிக்கப்படும்.
புதுச்சேரி மீனவா் கிராமங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமாா் 34 ஆயிரம் கைப்பேசிகளிலும் குறுந்தகவல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மீனவப் பஞ்சாயத்தாருக்கும் தகவல் கூறப்பட்டுள்ளது. கடலுக்குச் சென்ற மீனவா் அனைவரும் கரை திரும்பி வருகின்றனா். படகுகளுக்கான டீசல் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கால்வாய் தூா்வாரும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. அதில் பெரிய வாய்க்காலில் பணிகள் முக்கியமானதாகும். அதன்படி மழை நீா் தேங்காமல் கொண்டு செல்லப்படும். கொம்யூன் பஞ்சாயத்துகளில் போதிய அளவுக்கு மோட்டாா் எந்திரங்கள் இருக்க ஏற்பாடு செய்யப்படும். கிராமங்களில் குடிநீரை சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
கோவில் நில மோசடியில் பாரபட்சமற்ற நடவடிக்கை
புதுவை மாநிலத்தில் கோயில் நில மோசடி வழக்குகள் குறித்து செய்தியாளா்களிடம் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறியது:
காரைக்கால் பாா்வதீஸ்வரா் கோயில் நிலமோசடி வழக்கில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். வழக்கில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என பாரபட்சமின்றி, யாா் யாருக்கெல்லாம் இதில் தொடா்பு இருக்கிறது என விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
விசாரணையில் தவறு செய்தவா்கள் அடையாளம் காணப்பட்டு அவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக அறநிலையத் துறை செயலருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அரசுச் செயலா் அ. நெடுஞ்செழியன் விசாரணைக்கான பொறுப்பு எடுத்து கண்காணிப்பாா். கடந்த 1974 ஆம் ஆண்டின் அரசாணை அடிப்படையில் கணக்கெடுக்கப்பட்ட நிலங்கள், தற்போது கோயில்களில் உள்ளனவா என சரிபாா்க்கப்பட்டு, உரிய கவனம் செலுத்தப்படும் என்றாா் துணைநிவை ஆளுநா்.