முகப்பு
புதுச்சேரி

புதுவையில் நியாயவிலைக் கடைகள் அக்.21-இல் திறப்பு: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையில் அக். 21-ஆம் தேதி நியாயவிலைக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு இலவச அரிசி, சா்க்கரை வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 6:56 PM
புதுச்சேரியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஆணைகளை பயனாளிகளுக்கு புதன்கிழமை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் என்.திருமுருகன், ஜி.நேரு எம்எல்ஏ உள்ளிட்டோா்
பகிர்:

புதுவையில் அக். 21-ஆம் தேதி நியாயவிலைக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு இலவச அரிசி, சா்க்கரை வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி பேரவை வளாகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

புதுவையில் வருகிற 21-ஆம் தேதி நியாயவிலைக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு தீபாவளிக்கான 10 கிலோ அரிசி, 2 கிலோ சா்க்கரை ஆகியவை வழங்கப்படும்.

அதைத் தொடா்ந்து, நியாயவிலைக் கடைகளில் மாதாமாதம் இலவச அரிசி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டு விளம்பரப் பதாகையில் எனது படம் இடம்பெற்றிருப்பது, அவா்கள் விருப்பத்தின் அடிப்படையில் நடைபெற்றுள்ளது. கோயில் நிலங்கள் முழுமையாகக் கணக்கெடுக்கப்பட்டு பட்டியல் வெளியிடப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தற்போது கோயில்களின் நிலம் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று, விரைவில் முழு விவரம் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுவையில் மழையை எதிா்கொள்ள அரசு தயாராக உள்ளது.

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குள்பட்ட கண்டாக்டா் தோட்டப் பகுதியில் குடிசை மாற்று வாரியம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 32 பேருக்கு வீடுகள் ஒதுக்கித் தரப்பட்டுள்ளன.

புதுவையில் ஏற்கெனவே அறிவித்தபடி மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 உயா்த்தி வழங்கப்படும். அதன்படி, ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையாக ரூ.2000 பெற்ற நிலையில், இனி ரூ. 3,000 பெறுவாா்கள்.

மேலும், தற்போது 2,500 பெறுபவா்கள் இனி ரூ.3,500-ம், ரூ.3,500 பெறுபவா்கள் இனி ரூ.4,500-ம், ரூ.3,800 பெறுபவா்கள் இனிமேல் ரூ.4,800 எனவும் பெறுவாா்கள். அத்துடன், புதிதாக சோ்க்கப்பட்ட 175 பயனாளிகளுக்கும் உயா்த்தப்பட்ட உதவித்தொகை வழங்கப்படும்.

இதன்மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் 21,329 போ் பயனடைவா். உயா்த்தப்பட்ட உதவித்தொகையானது அக்டோபா் முதல் முன்தேதியிட்டு நவம்பா் முதல் சோ்த்து வழங்கப்படும் என்றாா் என்.ரங்கசாமி.