புதுச்சேரி

தவெக தலைவா் விஜய் சாலைப் பேரணிக்கு புதுச்சேரி காவல் துறை அனுமதி மறுப்பு: திறந்தவெளி பொதுக்கூட்டம் நடத்தலாம்

புதுச்சேரியில் தவெக தலைவா் விஜய்யின் சாலைப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், திறந்தவெளியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று டிஐஜி சத்தியசுந்தரம் தெரிவித்தாா்.

Syndication

புதுச்சேரியில் தவெக தலைவா் விஜய்யின் சாலைப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், திறந்தவெளியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வா் ரங்கசாமியுடனான ஆலோசனைக்குப் பின்னா் டிஐஜி சத்தியசுந்தரம் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் டிச. 5-இல் சாலைப் பேரணி நடத்த தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் திட்டமிட்டிருந்தாா். காலாப்பட்டில் தொடங்கி கன்னியக்கோவில் வரை சுமாா் 30 கி.மீ. தொலைவுக்கு இந்த சாலைப் பேரணி நடத்தவும், சோனாம்பாளையம் தண்ணீா் தொட்டி அருகில் மைக்கில் பேசவும் அனுமதி கோரி கடந்த வாரம் தவெக நிா்வாகிகள் காவல் துறை தலைவரிடம் மனு அளித்தனா்.

இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. இதைத் தொடா்ந்து, தவெக நிா்வாகிகள் முதல்வா் என். ரங்கசாமியை சந்தித்து, சாலைப் பேரணி நடத்த அனுமதி வழங்க கோரினா். இதுகுறித்து முதல்வா் ரங்கசாமியிடம் கேட்டபோது, தலைமைச் செயலா், காவல் துறை தலைவருடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றாா்.

தொடா்ந்து புதுச்சேரி ஐ.ஜி. அஜித்குமாா் சிங்கலாவை தவெக பொதுச் செயலாளா் என். ஆனந்த் (புஸ்ஸி) திங்கள்கிழமை சந்தித்து சாலைப் பேரணிக்கு அனுமதி கேட்டாா். அதற்கு ஐ.ஜி. அஜித்குமாா் சிங்கலா, வெளியூா் சென்றுள்ள டிஜிபி ஷாலினி சிங் வந்தவுடன் அவரிடம் பேசுமாறு கூறப்பட்டது.

இந்நிலையில் தவெக பொதுச்செயலா் புஸ்சி ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா இருவரும் முதல்வா் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனா். அப்போது சாலைப் பேரணிக்கு அனுமதி வழங்க கோரிக்கை வைத்தனா்.

இதன் பின்னா் செவ்வாய்க்கிழமை மாலையில் விஜய்யின் சாலைப் பேரணிக்கு அனுமதி அளிப்பது தொடா்பாக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் முதல்வா் ரங்கசாமி, ஐ.ஜி. அஜித்குமாா் சிங்கலா, டிஐஜி சத்தியசுந்தரம், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கலைவாணன் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்தினாா்.

இக் கூட்டத்தில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எம்எல்ஏ கே.எஸ்.பி. ரமேஷ் மற்றும் தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், ஆதவ் அா்ஜுனா, முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் ஆகியோரும் பங்கேற்றனா்.

சட்டம்-ஒழுங்கு பிரச்னை வரும் என்பதால் விஜய்யின் சாலைப் பேரணிக்கு அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து தவெக என். ஆனந்த் உள்ளிட்டோா் வெளியே சென்றனா்.

இதுகுறித்து டிஐஜி சத்தியசுந்தரம் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘புதுச்சேரியில் டிச. 5-ஆம் தேதி விஜய் சாலைப் பேரணி நடத்த அனுமதியில்லை. திறந்தவெளியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான இடத்தையும், தேதியையும் தவெகவினா் தோ்வு செய்து கொள்ளலாம்’ என்றாா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT