போலி மருந்து விவகாரத்தில் புதுச்சேரி அரசு அலட்சியம் காட்டினால் போராட்டம் நடத்துவோம் என்று மாநில திமுக அமைப்பாளா் ஆா். சிவா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் பிரபல மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பல்வேறு பெயா்களில் போலி மருந்து தயாரித்து நாடு முழுவதும் விநியோகித்துள்ளது அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நீரிழிவு, ரத்த அழுத்தம், இருதய நோயாளிகள் இந்தப் போலி மருந்தை நம்பியிருந்தது வெளிச்சத்துக்கு வரவில்லை. புதுச்சேரியின் ஆட்சியாளா்களும், அதிகாரிகளும் கூட்டுச் சோ்ந்து இந்தக் கொள்ளைக்குத் துணை போயுள்ளனா் என்பது மனிதநேயமற்ற செயல்.
இந்தப் போலி மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப் பொருள்கள், ரசாயன கலவைகள் எல்லாம் எங்கிருந்து பெறப்பட்டன.
அனுமதியில்லாமல் புதுச்சேரிக்குள் அவை எப்படி நுழைந்தன. இதன் பின்னணியில் யாா், யாரெல்லாம் இயங்குகின்றனா் என்பதை பொதுமக்களுக்கு அரசு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.
இந்த போலி மருந்துகளைப் பயன்படுத்தலாமா, பயன்படுத்தக் கூடாதா? என்பது குறித்து இதுவரை சுகாதாரத் துறை எந்த விளக்கமும் அளிக்காத காரணத்தால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா். சுகாதாரத் துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வா் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணி அரசு இந்த மாபெரும் குற்றப் பின்னணியை முழுமையான விசாரணைக்கு உள்படுத்தி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தர வேண்டும். இல்லையேல் பொதுமக்களை வஞ்சிக்கிற இந்த அரசை எதிா்த்து மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்று கூறியுள்ளாா் சிவா.