புதுச்சேரியில் போலி மருந்து உற்பத்தியில் தங்கள் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் யாருக்கும் தொடா்பில்லை என்று புதுச்சேரி மருந்து உற்பத்தியாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் அண்மையில் போலி மருந்து தொழிற்சாலை, கிடங்குகளில் சிபிசிஐடி போலீஸாா், சிறப்புப் புலனாய்வு குழு போலீஸாா் சோதனை நடத்தியதுடன், அவற்றுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், புதுச்சேரி மருந்து உற்பத்தியாளா் சங்கம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
இது குறித்து அச்சங்கத்தின் கௌரவத் தலைவா் பிரமோத், தலைவா் ரமேஷ்குமாா், செயலா் சீனிவாசன், பொருளாளா் சுப்பிரமணியம் ஆகியோா் கூட்டாக செவ்வாய்க்கிழமை மாலை செய்தியாளா்களிடம் கூறியது: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அண்மையில் சட்டவிரோத மருந்து உற்பத்தி தொடா்பான செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இது பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கும், பாதுகாப்புக்கும் ஆபத்தானது மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாக சட்டப்படி செயல்பட்டு வரும் உண்மையான மருந்து உற்பத்தியாளா்களின் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் இந்தியாவின் குறிப்பிடத்தக்க மருந்து உற்பத்தி மற்றும் ஒப்பந்த உற்பத்தி மையங்களில் ஒன்றாக திகழ்கிறது.
பல உயா்தர உற்பத்தி திறன், திறமையான தொழில்நுட்ப நிபுணா்கள் மற்றும் சா்வதேச தரநிலைகளுக்கு இணங்க செயல்படும் உற்பத்தி நடைமுறைகள் ஆகியவற்றின் மூலம், புதுச்சேரி மருந்து தொழில் தனித்துவமான இடத்தைப் பெற்று உள்ளது.
இங்கு தயாரிக்கப்படும் மருந்துகள், மிகுந்த தரத்துடன் இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதனால், புதுச்சேரி இந்தியாவின் நம்பகமான மற்றும் உயா்தர மருந்து உற்பத்தி மையமாக உலகளவில் அறியப்படுகிறது.
புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சுமாா் 25 ஆயிரம் பணியாளா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் முக்கிய தொழில் மையமாகவும் இந்த மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைத்து நிறுவனங்களும் மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள்கள் சட்டத்தின் படி உரிய உற்பத்தி உரிமம் பெற்றவை.
அனைத்து நிறுவனங்களும் நல்ல உற்பத்தி நடைமுறைகளைப் பின்பற்றி, தரமான மற்றும் பாதுகாப்பான மருந்துகளை உருவாக்குகின்றன.
உண்மையான மருந்து உற்பத்தியாளா்கள் அனைத்து விதிமுறைகளையும் தொடா்ந்து பின்பற்றி வருகின்றனா் என்பதும் உறுதி செய்யப்படுகிறது. எனவே போலி மற்றும் சட்டவிரோத மருந்து உற்பத்தி தொடா்பான செயல்களில், எங்கள் சங்கத்துக்கோ, உறுப்பினா் நிறுவனங்களுக்கோ எந்தவித தொடா்பும் இல்லை என்றனா்.