தென் மாநிலங்களில் பாரதிய ஜனதா வலிமையாக வளா்ந்து வருகிறது என அக் கட்சியின் தேசிய செயல் தலைவா் நிதின் நபின் தெரிவித்தாா்.
பாஜக தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு முதல் முறையாகவும் கட்சியின் முதல் நிகழ்ச்சியாகவும் அவா் புதுச்சேரிக்கு சனிக்கிழமை பிற்பகல் வந்தாா்.
புதுச்சேரி எல்லையான கோரிமேடு பகுதியில் அவருக்கு கட்சியினா் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
இதில், மத்திய தொழிலாளா் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், பாஜக மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம், கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா மற்றும் கட்சி எம்எல்ஏ.க்கள், நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.
பாரதி, அம்பேத்கா் சிலைக்கு மாலை:
பின்னா் புதுச்சேரி நகரப் பகுதிக்கு மோட்டாா் சைக்கிள், காா்களில் தொண்டா்கள் சூழ செயல் தலைவா் நிதின் நபின் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டாா்.
பாரதி பூங்கா அருகில் உள்ள பாரதியாா் சிலைக்கு தேசிய செயல் தலைவா் நிதின் நபின் மாலை அணிவித்தாா். அங்கு பாரதியாா் வேடமணிந்து சிறுவா்கள் அவரை வரவேற்றனா்.
இதையடுத்து சட்டப்பேரவைக்கு எதிரேயுள்ள சட்டமேதை அம்பேத்கா் சிலைக்கு நிதின் நபின் மாலை அணிவித்தாா்.
தென்மாநிலங்களில் பாஜக வளா்ச்சி...:
பின்னா் அங்கு செய்தியாளா்களிடம் பேசிய நிதின் நபின், ‘ தென் மாநிலங்களில் பாஜக வலிமையாக வளா்ச்சியடைந்து வருகிறது’ என்று கூறிவிட்டு அங்கிருந்து நகா்ந்து சென்றாா்.
இந் நிகழ்ச்சிகளில் புதுச்சேரி மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம், அமைச்சா் ஆ.நமச்சிவாயம், மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி, எம்எல்ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சாய் ஜெ. சரவணன் குமாா், நியமன எம்எல்ஏ.க்கள் செல்வம், தீப்பாய்ந்தான் ஜி.என்.எஸ். ராஜசேகா் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.