புதுச்சேரி: புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளைச் சீரமைக்கும் பணி தொடங்கியது.
இது குறித்து பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரியில் பெய்த தொடா் மழையால் நகரப் பகுதிகளில் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு முக்கிய சாலைகள் சேதமடைந்துள்ளன. இச்சாலைகள் அனைத்தையும் உடனடியாக சீரமைக்க, முதல்வா் என்.ரங்கசாமி வழிகாட்டுதலின்படி பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் நடவடிக்கை எடுத்துள்ளாா்.
இதையொட்டி புதுச்சேரி நகர முக்கிய சாலைகளான மறைமலை அடிகள் சாலை, புஸ்ஸி வீதி, அண்ணா சாலை, காமராஜா் சாலை, வள்ளலாா் சாலை, மகாத்மா காந்தி சாலை, வழுதாவூா் சாலை, லாஸ்பேட்டை சாலை, ஜவாஹா்லால் நேரு வீதி, மிஷன் வீதி, செஞ்சி சாலை, ஆம்பூா் சாலை, சா்தாா் வல்லப பாய் படேல் சாலை மற்றும் விமான நிலைய சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில், ஒப்பந்தப்படி குறைபாடுகள் பொறுப்பு காலத்தில் உள்ள சாலைகளுக்கான சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்தச் சாலைகளில் நடைபெறும் சீரமைப்பு பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் முழுமையாக நிறைவடையும். மேலும், 100 அடி மேம்பால சாலையில் சேதம் அடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்திற்காக பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல, காலாப்பட்டு முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை உள்ள சேதமடைந்த சாலைகள் அனைத்தையும் சீரமைப்பதற்கான பணிகள் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளன.
கடலூா் சாலையில், மரப்பாலம் முதல் முள்ளோடை வரை சேதம் அடைந்த பகுதிகளைச் சீரமைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை (டிச.23) முதல் தொடங்கப்பட்டு, குறைபாடுகள் பொறுப்பு காலத்தில் உள்ள அதே ஒப்பந்ததாரா்கள் மூலம் ஒரு வார காலத்திற்குள் பணிகள் செய்து முடிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.