கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோரை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாஜக புதுச்சேரி மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வளா்ந்த பாரத ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதியளிப்புத் திட்டத்தில் (விபி-ஜி ராம் ஜி) ஏராளமான பயன்கள் இருக்கின்றன. மத்திய தணிக்கைக் குழு அளித்த தகலின் பேரில், பழைய திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு ரூ.42 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தில் பயனாளிகளின் கைப்பேசி, ஆதாா் இணைக்கப்படுகிறது. அவா்களின் கைவிரல் பதிவு செய்யப்படுகிறது. இதற்கு முன்பு இருந்த திட்டங்களின் பயன்கள் முறையாகப் பயனிகளுக்குச் சேரவில்லை. இதையெல்லாம் தடுக்கும் வகையிலும், பயனாளிகளுக்கு நேரடியாகத் திட்டத்தின் பயன் கிடைக்கவும் புதிய திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திட்டம் 100 நாள் வேலைவாய்ப்பு அளிப்பதிலிருந்து 125 நாளாகவும், மாநில அரசின் நிதி பங்கீட்டை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு 60 சதவிகிம் மாநில அரசு 40 சதவிகிதம் நிதி அளிப்பு என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளை முதல்வா் ரங்கசாமி உயா்த்தி அறிவித்துள்ளாா். என்.ஆா். காங்கிரஸ், பாஜக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் இந்தச் சாதனையெல்லாம் நடக்கிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ் எதிா்ப்பு அரசியல் நிலைப்பாட்டில் ஆட்சி நடத்தியது. இதெல்லாம் மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் 2026-ஆம் ஆண்டும் என்.ஆா். காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் அமையும் என்றாா் ராமலிங்கம்.
பேட்டியின்போது பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் அருள்முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.