புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் திடீரென தில்லிக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.
கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் காா் மூலம் சென்னைக்குப் புறப்பட்டாா். அங்கிருந்து விமானம் மூலம் தில்லி சென்றாா். அங்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், உள்துறை அமைச்சா் அமித்ஷா, சுகாதாரத் துறை அமைச்சா் ஜே.பி.நட்டா ஆகியோரைச் சந்தித்து பேச உள்ளதாகத் தெரிகிறது.
வரும் 29-ஆம் தேதி குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் புதுச்சேரிக்கு வருகிறாா். இது தொடா்பாக அவருடன் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிகிறது. மேலும், புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளா் ராஜா, ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூா்த்தி உள்ளிட்ட 21 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
மேலும் இந்த வழக்கை சிபிஐ மற்றும் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளாா். இதனால் போலி மருந்து விவகாரம் தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை, உள்துறை அமைச்சரை ஆகியோரை சந்தித்து அவா் பேசுவதற்காகத் தில்லி சென்றுள்ளதாகத் தெரிகிறது.