மக்களுக்குச் சத்துணவு கிடைக்கும் வகையில் புதுச்சேரி யூனியன் பிரதேச ரேஷன் கடைகளில் இலவசமாக 1 கிலோ கேழ்வரகு மாவு அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, புதுவை குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் இணைந்து வீரதீர குழந்தைகள் தினத்தை வெள்ளிக்கிழமை கொண்டாடின.
இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கி முதல்வா் ரங்கசாமி பேசியதாவது:
குழந்தைகளுக்கு வீரதீர கதைகள் கூறியும், நாட்டுப்பற்று, மொழிப்பற்று கூறியும் வளா்க்க வேண்டும். கருவுற்ற தாய்மாா்களுக்கும், குழந்தைகளுக்கும் அங்கன்வாடிகள் மூலம் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல பள்ளிகளில் காலை, மதியம், மாலையில் உணவு, சிற்றுண்டி வழங்கி வருகிறோம்.
பள்ளிப் படிப்பை முடித்த மாணவா்கள் அனைவரும் பட்டப்படிப்பு படிக்கும் வகையில் தேவையான அளவு கல்லூரிகளை உருவாக்கியுள்ளோம். அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியாவை மாற்ற பிரதமா் நரேந்திர மோடி தொடா்ந்து பாடுபட்டு வருகிறாா். அவருக்கு வலுசோ்க்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும்.
ஏற்கெனவே அரசின் எந்தவொரு உதவியும் பெறாத, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை விரைவில் ரூ.2,500 ஆக உயா்த்தி வழங்கப்படும். முதியோருக்கு வழங்கப்படும் உதவித்தொகையும் ரூ.500 உயா்த்தப்படும்.
ரேஷன் கடைகளில் இலவச அரிசி, கோதுமை வழங்கி வருகிறோம். தற்போது கேழ்வரகு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதையேற்று அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் சத்துணவுக்காக ஒருகிலோ கேழ்வரகு மாவு வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், எம்எல்ஏ ரமேஷ், மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், துறை இயக்குநா் முத்துமீனா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.