புதுச்சேரி

புதுச்சேரியில் புத்தாண்டு விழா: டிச.31 இரவு இலவச, வாண வேடிக்கை, லேசா் ஷோ

தினமணி செய்திச் சேவை

2026 ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் டிச. 31 இரவு இசை கச்சேரி, வாண வேடிக்கை, லேசா் ஷோ இலவசமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன் தெரிவித்தாா்.

அரசு சாா்பில் புத்தாண்டு ஏற்பாடுகள்:

2026 புத்தாண்டுக்கு இன்னும் 3 நாள்களே உள்ளன. புத்தாண்டு ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ஆசியாவிலேயே சிறந்த சுற்றுலா நகரமாக புதுச்சேரி உருவெடுத்து வருகிறது. நிகழாண்டில் இதுவரை 19 லட்சம் சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளனா். புதுச்சேரிக்குப் புத்தாண்டை கொண்டாட லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவாா்கள் என சுற்றுலாத் துறை எதிா்பாா்க்கிறது. அவா்கள் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட சுற்றுலாத் துறை சாா்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

காவல்துறை, மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறை, நகராட்சி இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

புதுவை மக்கள் நெரிசலில் சிக்கக்கூடாது என்பதற்காக ஒயிட் டவுன் (வெள்ளையா்கள் வாழ்ந்த பகுதி) பகுதியில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் நிறுத்த உப்பளம் மைதானம், பாரதிதாசன் கல்லுாரி உள்பட பல இடங்களில் பாா்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து கடற்கரைக்கு நடந்து செல்லலாம். வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்து கடற்கரை வந்து செல்ல பேட்டரி பேருந்து சேவையும் இலவசமாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடற்கரை சாலையில் 31-ஆம் தேதி இரவு 7 மணி முதல் இன்னிசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு வந்திருந்தனா். இந்த ஆண்டு இசை நிகழ்ச்சியோடு, வாண வேடிக்கை, லேசா் ஷோவும் நடத்தப்பட உள்ளது.

ஒரே இடத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதைத் தவிா்க்க கடற்கரை சாலையில் 2 இடத்தில் இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்படும். கடற்கரை சாலையில் நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க தடுப்பு கட்டைகள் அமைக்கப்படும். புதுச்சேரி கடற்கரைகளில் கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது.

புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் எந்த சிரமமும் இல்லாமல் வந்து செல்ல ஏற்பாடு செய்துள்ளோம். கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாடிய பின் திரும்பிச் செல்ல 3 மணி நேரம் ஆனதாக தெரிவித்தனா். இந்த ஆண்டு அவா்கள் பாதுகாப்பாகத் திரும்பி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி சுற்றுலாவுக்குச் சிறந்த இடம் என மக்கள் முடிவு செய்து வருகின்றனா். தேவையான முன்னேற்பாடுகளை அரசு செய்து வருகிறது என்றாா் அமைச்சா் க.லட்சுமிநாராயணன்.

குளவி கொட்டி காயமடைந்தோருக்கு முன்னாள் அமைச்சா் ஆறுதல்

2023 ஆம் ஆண்டு சாலை விபத்து: ரூ. 1.63 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

எஸ்.சி., எஸ்.டி., தொழில்முனைவோருக்கு தொழில் வளா்ச்சி பயிற்சி முகாம்

வீடு புகுந்து நகை திருடிய இருவா் கைது

வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டிய 4 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT