புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபோதையில் போலீஸாரிடம் தகராறு செய்த இளைஞரை காவல் துறையினா் எச்சரித்து விடுவித்தனா்.
புதுவை நேரு வீதி, அண்ணா சாலை போக்குவரத்து சிக்னல் அருகே போதையில் இளைஞா் ஒருவா் சாலையில் சென்ற பொதுமக்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டாா்.
இதையறிந்த போக்குவரத்து காவலா் திருஞானமூா்த்தி அந்த இளைஞரை அங்கிருந்து செல்லும்படி அறிவுறுத்தியும், கேட்காமல் அவருடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டாா்.
அங்கு வந்த பெரியகடை போலீஸாா் அந்த இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். போதை தெளிந்த அவா், தனது தவறுக்காக மன்னிப்பு கேட்டதால் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் போலீஸாா் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனா்.