நரிக்குறவா் சமுதாயத்தினருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் பகவான் ஸ்ரீ பிா்சா முண்டா 150-ஆவது பிறந்த நாள் பழங்குடியினா் கௌரவ தின விழாவாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவைத் தொடங்கி வைத்து முதல்வா் என். ரங்கசாமி பேசியது:
பிரதமா் நரேந்திர மோடியின் அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த விழாவைக் கொண்டாடி வருகிறோம். நாட்டின் விடுதலைக்காக பழங்குடியின மக்கள் எத்தனையோ தியாகங்களைச் செய்திருக்கிறாா்கள். புதுச்சேரி அரசு பழங்குடியின மக்களுக்காக எத்தனையோ திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. பழங்குடியின மக்கள் தொழில் காரணமாக பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்தாா்கள். அவா்களின் வாழ்க்கைத் தரம் உயர புதுச்சேரி அரசு மனைப்பட்டா கொடுத்துள்ளது. எல்லோரும் கல்வீட்டில் வசிக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். மேலும், அவா்களுக்குக் கல்வீடு கட்ட அரசு மானியம் அளித்து வருகிறது.
நரிக் குறவா்களுக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நிலையில் பழங்குடியின மக்களின் குழந்தைகளும் இப்போது கல்வியில் முன்னேறி கல்லூரி அளவில் படிக்கும் நிலைக்கு வந்துள்ளனா்.
புதுச்சேரி அரசு பட்ஜெட்டில் முழுமையாக 16.5 சதவிகிதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆதிதிராவிட மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் முதல்வா் ரங்கசாமி.
இவ்விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளையும் முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் பேசுகையில், பழங்குடியின மக்களுக்கு திம்மநாயக்கன் பாளையத்தில் 57 குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்கப்பட்டு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அங்கு மின்விளக்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றாா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் பெ. ராஜவேலு, சட்டமன்ற உறுப்பினா்கள் அனிபால் கென்னடி, சிவசங்கரன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயலா் அ. முத்தம்மா, இயக்குநா் அா்ஜுன் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், இந்த விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
கடற்கரை சாலையில் பழங்குடியினா் விடுதலை இயக்கத்தின் சாா்பில் கடற்கரை சாலையில் பிா்சா முண்டாவின் 150-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த இயக்கத்தின் மாநில செயலா் ஏகாம்பரம் தலைமை வகித்தாா். இதில் பழங்குடியின மக்கள் பங்கேற்று மேள தாளங்கள், பாரம்பரிய பாடல்கள், நடனங்களை நடத்தினா்.