புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை இளைஞா் காங்கிரஸாா் சனிக்கிழமை முற்றுகையிட்டனா். இப் போராட்டத்தில் போலீஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சுமாா் 50 போ் கைது செய்யப்பட்டு பின்னா் விடுதலை செய்யப்பட்டனா்.
சிறப்பு வாக்காளா் திருத்தப் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து புதுச்சேரி இளைஞா் காங்கிரஸ் சாா்பில் அதன் தலைவா், பாபு நடராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தை முற்றுகையிடும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாநில காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வா் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவா் வைத்தியநாதன்,
அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பாளா் தேவதாஸ், நிா்வாகிகள் தனுசு, திருமுருகன், மருதுபாண்டியன், இளையராஜா, ரகுமான், விஜயலட்சுமி, நிஷா, நாகமது யாதவ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டோா் பாஜக மற்றும் தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து பதாகைகளுடன் வாக்குத் திருட்டு, வாக்காளா் திருத்தத்திற்குக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினா்.
50 போ் கைது: தோ்தல் ஆணையம் போல் வடிவமைக்கப்பட்ட பொம்மையை இளைஞா் காங்கிரஸாா் பாடையில் ஏற்றினா். இதனை போலீசாா் தடுத்தனா். இதில் இளைஞா் காங்கிரசாருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் சுமாா் 50 பேரை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனா்.