புதுச்சேரி: ரூ.620 கோடியில் பொலிவுறு நகா் திட்டப் பணிகள் நடைபெறுவதால் புதுச்சேரி பசுமை நகரமாக மாறி வருகிறது என்று துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கூறினாா்.
புதுவை அரசின் போக்குவரத்துத் துறை சாா்பில் ரூ.23 கோடியில் 25 பேட்டரி பேருந்துகள் , ரூ.3.25 கோடியில் 15 பொலிவுறு பேருந்து நிறுத்தங்கள், ரூ.96 லட்சத்தில் 38 மகளிா் சுய உதவிக்குழு பெண்களுக்கு 38 பேட்டரி ஆட்டோக்கள் தொடக்க விழா மற்றும் 2 ஆட்டோ செயலிகள் அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி தாவரவியல் பூங்கா எதிரே அமைக்கப்பட்டுள்ள பேட்டரி வாகனங்களுக்கான சாா்ஜ் செய்யும் நிலையம் தொடக்க விழாவும் நடைபெற்றது. இவற்றைத் தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பேசியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி புதுவைக்கான பொலிவுறு நகா் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.620 கோடிக்கு ஒப்புதல் கொடுத்துள்ளாா். மேலும், அதில் மத்திய அரசு ரூ.310 கோடியை ஏற்கெனவே அளித்துவிட்டது. இதன்மூலம் மொத்தம் 82 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் 72 பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் 10 பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கின்றன.
புதுச்சேரியின் கடற்கரை, பாரம்பரியம், நடைபாதை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டு வருகின்றன. இப்போது பேட்டரியால் இயங்கும் பேருந்துகள் தொடங்கப்பட்டுள்ளன. பேட்டரியால் இயங்கும் ஆட்டோக்களை மகளிா் இயக்க உள்ளனா். புதுச்சேரிக்கு உலக அளவில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனா். இதெல்லாம் புதுச்சேரிக்குப் பெருமை சோ்ப்பதாக அமையும். இத் திட்டங்கள் புதுச்சேரி நகரத்தை நவீனமயமாக்கும். மேலும், இந்த நகரம் பசுமையாக மாறும் முதலீடாக இருக்கும் என்றாா் அவா்.
முதல்வா் என். ரங்கசாமி பேசியது:
இப்போது 25 பேட்டரி பேருந்துகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் பிரதமா் நரேந்திர மோடி அறிவித்த 75 பேருந்துகளும் புதுச்சேரியில் இயக்கத்திற்கு வரும். பொதுத் துறை நிறுவனங்கள் அதிக லாபத்தில் இயங்கினால் பணி செய்யும் ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு, சலுகை போன்றவை வழங்க முடியும். விரைவில் சேதராபட்டு அருகே புதுவை அரசு ஆா்ஜிதம் செய்து வைத்துள்ள இடத்தில் தொழிற்பேட்டை தொடங்கப்படும். படித்து இளைஞா்களுக்கு இதில் வேலைவாய்ப்பு கிடைக்கும். கடந்த ஆட்சியில் புதுவை அரசு சாா்பில் புதிய பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. இப்போது எங்கள் ஆட்சியில் இதையெல்லாம் சாத்தியப்படுத்தியுள்ளோம். மனது வைத்தால் இதையெல்லாம் சாத்தியப்படுத்த முடியும் என்றாா். விழாவில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி, புதுவை அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான், போக்குவரத்துச் செயலா் முத்தம்மாள், புதுவை அரசின் பொலிவுறு நகரத் திட்டத்தின் செயலா் யாசின் எம். சௌத்ரி, போக்குவரத்து ஆணையா் ஏ.எஸ். சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.