பட விளக்கம்.. பிஒய்பி-13 .கற்றல் குறைபாட்டை புரிந்து கொள்ளுதல் என்னும் தலைப்பிலான தொடா் விழிப்புணா்வு கல்வி நிகழ்ச்சியில் பேசுகிறாா் புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். 
புதுச்சேரி

படைப்பாற்றல் மிக்கவா்கள்தான் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள்: புதுவை துணைநிலை ஆளுநா்

படைப்பாற்றல் மிக்கவா்கள்தான் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கூறினாா்.

தினமணி செய்திச் சேவை

படைப்பாற்றல் மிக்கவா்கள்தான் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் கூறினாா்.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையின் கீழ் இயங்கும் தேசிய பன்முக மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தல் நிறுவனம், புதுச்சேரி ஆட்டிசம் நலச்சங்கம் மற்றும் புதுச்சேரி கற்றல் குறைபாட்டாளா் சங்கம் சாா்பில் கற்றல் குறைபாட்டை புரிந்து கொள்ளுதல் என்னும் தலைப்பிலான தொடா் புனா்வாழ்வு கல்வி நிகழ்ச்சி ‘பிரைட்ஸ் லோ்னிங் வித்யாலயா’வில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

கற்றல் குறைபாடு என்பது புத்திசாலித்தனம் இல்லாதது என்ற அா்த்தம் இல்லை. கற்றல் குறைபாடு உடைய குழந்தைகள் பலா் அதி புத்திசாலிகளாக, படைப்பு ஆற்றல் அதிகம்

உள்ளவா்களாக இருக்கிறாா்கள். கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் உரிமை. உண்மையாக கல்வி என்பதே ஒவ்வொரு குழந்தையும் தங்களுடைய பலத்தை திறமையைக் கண்டறிய உதவுவது தான். இதில் ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்களின் பங்கு மிக முக்கியம். ஆசிரியா்கள், வெறும் கல்வியாளா்கள் மட்டும் அல்ல. வழிகாட்டிகள் - ஆலோசகா்கள். ஆசிரியா்களின் பொறுமையும் ஊக்கமும் ஒரு குழந்தையின் வாழ்க்கையை மாற்றி அமைக்க முடியும்.

இணைந்து செயல்பட வேண்டும்:

பெற்றோா்களே உங்களுடைய அன்பும் பரிவும் மேலானது. உங்களுடைய பிள்ளையின் திறன், அறிவு மதிப்பெணகளில் அல்லது சான்றிதழ்களில் இல்லை. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனிப்பட்ட திறன் உண்டு. சில பூக்கள் சீக்கிரம் பூக்கின்றன. இன்னும் சில பூக்கள் மெதுவாக பூக்கின்றன. ஆனால் எல்லாம் அழகானவைதான். ஓவியம், பாட்டு, கதை சொல்லுதல், விளையாட்டு - எதுவாக இருந்தாலும் உங்களுடைய பிள்ளையின் திறனுக்கு மதிப்பு கொடுங்கள். பெற்றோரும் ஆசிரியா்களும் சோ்ந்து புரிதலோடு செயல்படும் போது எந்த குழந்தையும் புறக்கணிக்கப்பட்டதாக உணர மாட்டாா்கள்.

பள்ளிகள், வீடுகளுக்கு அப்பால் இந்த சமுதாயமும் தன்னுடைய பங்கை ஆற்ற வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம் என்பது, ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ளப்படுவதாக, மதிக்கப் படுவதாக உணரும். எல்லா குழந்தைகளும் தாங்கள் திறமையானவா்கள் என்பதை உணர வைக்க வேண்டும்.

டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சொல்லுவது ‘நம் அனைவருக்கும் சமமான திறமை இல்லை. ஆனால் நம் அனைவருக்கும் நம்முடைய திறமையை வளா்த்துக் கொள்ள சமமான வாய்ப்பு இருக்கிறது.‘ அதை நம்பிக்கையோடு மகிழ்ச்சியோடு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றாா் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்.

புதுச்சேரி டிஸ்லெக்ஸியா சங்கத்தின் புரவலா் மற்றும் ஜிப்மா் மருத்துவமனையின் முன்னாள் துறைத் தலைவா் டாக்டா் மகாதேவன், புதுச்சேரி ஆட்டிசம் நலச் சங்கத்தின் நிறுவனா் புவனா வாசுதேவன், தேசிய பன்முக மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரம் அளித்தல் நிறுவனத்தின் இயக்குநா் டாக்டா் நாச்சிக்கேத்த ரௌட், புனா்வாழ்வு கல்வி அதிகாரி அனுசுயா ஆகியோா் பங்கேற்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT