தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதால், அதில் தொடா்புடைய தொழிற்சாலைக்குச் சீல் வைக்கப்பட்டது.
புதுவை அரசு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகள் போன்ற 15 வகையான பொருள்களுக்கு தடை விதித்துள்ளது.
இவற்றை உற்பத்தி செய்வது, விற்பது, பயன்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பானது. இருப்பினும் இத்தகைய பொருள்களை சில தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வது புதுவை மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் கவனத்திற்கு வந்தது. அதன்
உறுப்பினா் செயலா் ரமேஷ் ஆலோசனைப்படி வில்லியனுாா் வட்டாட்சியா் சேகா், வருவாய் ஆய்வாள்ர ராஜேஷ், கிராம உதவியாளா் மணிகண்டன், புதுவை மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் இளநிலை பொறியாளா் புகழேந்தி, உதவி அறிவியல் அதிகாரி விமல்ராஜ், உதவியாளா் சீனிவாசன் ஆகியோா் அடங்கிய குழுவினா் ஒதியம்பட்டு கிராமத்தில்அமைந்துள்ள மணக்குள விநாயகா் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அந்த தொழிற்சாலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கைப்பைகள் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தொழிற்சாலையில் இருந்து ஒரு டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து புதுவை மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் தலைவா் ஜவஹா் ஒப்புதலோடு தொழிற்சாலைக்குச் சீல் வைக்கப்பட்டது.