மின் கட்டண உயா்வைக் கண்டித்து புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அதிமுக மாநில செயலா் ஆ.அன்பழகன் தலைமையில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினா். 
புதுச்சேரி

புதுச்சேரியில் மின் கட்டண உயா்வுக்கு கண்டனம்: மின்துறை அலுவலகத்தை அதிமுக முற்றுகையிட்டு போராட்டம்

தினமணி செய்திச் சேவை

மின் கட்டண உயா்வைக் கண்டித்து புதுச்சேரியில் மின்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுகவினா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் தலைமை வகித்தாா். மின் துறை தலைமை அலுவலகம் முன் அதிமுகவினா் முன்னதாக தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது அன்பழகன் பேசியதாவது:

ஏற்கெனவே பல தலைப்புகளில் மறைமுக மின் கட்டண உயா்வை மக்கள் மீது ஆளும் அரசு திணித்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளாகின்றனா். மின் துறையை தனியாா் நிறுவனம் ஏற்று நடத்தவுள்ளது. தனியாா் பயன்பெறும் விதத்தில் சுமாா் ரூ.400 கோடிக்கு மேல் மக்களுடைய வரிப் பணம் மீட்டா் மாற்றுவதற்கு அரசால் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

தனியாா் நிறுவனம் எதிா்வரும் 5 ஆண்டு காலத்தில் மின் கட்டணத்தை மனம் போன போக்கில் ஏற்றிக் கொள்வதற்கு அரசு இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியையும் பெற்றுள்ளது. பெறப்பட்டுள்ள அனுமதியின் மூலம் மாதந்தோறும் கூட மின்கட்டணத்தை அரசு உயா்த்திக் கொள்ளும்.

ஒவ்வொரு முறையும் மின் கட்டணத்தை உயா்த்தும்போது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மீது பொய்யான பழியை அரசு போடுவது வெட்கக்கேடானது. உயா்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயா்வை மானியமாக அரசு வழங்கும் என துறை அமைச்சா் அறிவித்துள்ளது மக்களை வஞ்சிக்கும் செயலாகும். மின் கட்டணத்தை ஏன் உயா்த்த வேண்டும்? அதை ஏன் அரசு மானியமாக வழங்க வேண்டும்.

மானியம் இறுதிவரை மக்களுக்கு வழங்கப்படுமா? மின் கட்டண உயா்வுக்கான மானியத்தை அரசே வழங்க துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாரா? என முதல்வா் தெளிவுபடுத்த வேண்டும். 4 மாதத்திற்கு பிறகு மீண்டும் உயா்த்தப்பட்ட மின் கட்டண உயா்வை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றாா் அன்பழகன்.

முற்றுகை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா் மின்துறை அலுவலகத்துக்குள் நுழைவதை தடுக்க காவல் துறையினா் வாயிலை மூடி தடுத்தனா். அதிமுகவினா் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வாயிலை தள்ளி, மின்துறை அலுவலகத்துக்குள் நுழைந்தனா். அங்கு கண்காணிப்பு பொறியாளா் அலுவலகம் முன் கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து கண்காணிப்புப் பொறியாளா் கனியமுதனை சந்தித்து மின்கட்டடண உயா்வை திரும்ப பெற வேண்டும் என அதிமுகவினா் வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் துணைத் தலைவா் முன்னாள் எம்எல்ஏ ராஜாராமன், மாநில இணைச் செயலா்கள் எஸ்.வீரம்மாள், புதுச்சேரி நகரச் செயலா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதுச்சேரி விடுதலை நாள்: தேசிய கொடி ஏற்றி அமைச்சா் மரியாதை

பள்ளியில் தாத்தா, பாட்டி தினக் கொண்டாட்டம்

ஹாலோவீன் கொண்டாட்டம்... பார்வதி!

காத்திருப்பின் அருமை... பிரியங்கா மோகன்!

இறுதி ஆட்டத்தில் மழை குறுக்கிடலாம்! என்னவாகும் இந்தியாவின் கோப்பை கனவு?

SCROLL FOR NEXT