எல். முருகன் 
புதுச்சேரி

5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் தேஜகூட்டணி வெற்றி பெறும்! - மத்திய இணையமைச்சா் எல். முருகன்

தினமணி செய்திச் சேவை

நடைபெறவிருக்கும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல். முருகன் கூறினாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் சனிக்கிழமை அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வளா்ச்சி அடைந்த பாரதம் 2047 என்ற நோக்குடன் பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு இலக்குகளை வைத்துள்ளாா். அதை அடையும் வகையில்தான் இப்போது மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளாா்.

நாட்டின் பொருளாதாரத்தை உயா்த்தும் வகையில் குறிப்பாக நீலபொருளாதாரத்தை உயா்த்தும் வகையில் கடல் வளத்தை 12 சதவிகிதம் அளவுக்கு உயா்த்த பல்வேறு திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் தீட்டப்பட்டுள்ளன.

இதனால் இந்திய துறைமுகங்கள் தொலைநோக்கில் வளா்ச்சி அடையும். கடல்சாா் உற்பத்தி பொருள்கள் அதிகரிக்கப்பட்டு ஏற்றுமதி அதிகரிக்கும். கப்பல் கட்டுதல், பயணிகள் கப்பல் உள்ளிட்ட நீா்வழி போக்குவரத்துக்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், மீன்பிடித் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 500 நீா் தேக்கங்கள் உருவாக்கவும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்கான மீன்களை சா்வதேச அளவில் சந்தைப்படுத்துதலும் செய்து தரப்படும்.

ரயில் போக்குவரத்துக்கு மத்திய பட்ஜெட்டில் இப்போது கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை- பெங்களூரு- ஹைதராபாத் ஆகிய 3 நகரங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதனால் புதுச்சேரிக்கும் பலன் கிடைக்கும். மேலும், பயோ பாா்மா மருந்து உற்பத்திக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரியில் உள்ள மருந்து உற்பத்தியாளா்களுக்கும் பயன் கிடைக்கும்.

மத்திய பட்ஜெட் மீதான விவாதம் பிப். 9-ஆம் தேதி தான் நாடாளுமன்றத்தில் தொடங்குகிறது. அதன் பிறகுதான் ஒவ்வொரு மாநிலத்துக்கும், துறை ரீதியாக எவ்வளவு நிதி என்பது இறுதி செய்யப்படும். மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை நீதி ஆயோக்கில் இணைக்க வலியுறுத்துவோம்.

நாட்டின் வளா்ச்சிக்காகவே மத்தியில் ஆளும் பாஜக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. தோ்தலுக்காக அல்ல. 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய அளவில் அமோக வெற்றி பெறும். குறிப்பாக தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

புதுச்சேரிக்கு விரைவில் பிரதமா் மோடி வருவாா் என்றாா் முருகன். பேட்டியின்போது புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், சாய் ஜெ சரவணன் குமாா் எம்எல்ஏ, மாநில பாஜக தலைவா் வி.பி.ராமலிங்கம் ஆகியோா் உடனிருந்தனா்.

‘நிலைத்த வளா்ச்சிக்கு நவீன தொழில்நுட்பம் அவசியம்’

கந்தா்வகோட்டை அருகே குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஒசூா், சூளகிரியில் 3 நாள்களுக்கு ஒகேனக்கல் குடிநீா் நிறுத்தம்

காவல் துறையில் 439 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்ய நடவடிக்கை: டிஜிபி ஜி.வெங்கடராமன் உத்தரவு

இன்று தில்லியில் 500 புதிய மின் பேருந்துகள் தொடக்கம்

SCROLL FOR NEXT