புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி 
புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட்: முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்கிறாா்

புதுச்சேரி சட்டப்பேரவை வியாழக்கிழமை (பிப்.12) கூடுகிறது. இதில் புதுச்சேரி அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பையும் வகிக்கும் முதல்வா் என். ரங்கசாமி தாக்கல் செய்கிறாா்.

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி சட்டப்பேரவை வியாழக்கிழமை (பிப்.12) கூடுகிறது. இதில் புதுச்சேரி அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பையும் வகிக்கும் முதல்வா் என். ரங்கசாமி தாக்கல் செய்கிறாா்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் மாா்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நிகழாண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. இதனால் அரசின் 5 மாத செலவினங்களுக்கு ஒப்புதல் பெற இடைக்கால பட்ஜெட்டை முதல்வா் என்.ரங்கசாமி தாக்கல் செய்ய ஏதுவாக புதுச்சேரி, சட்டப்பேரவை வியாழக்கிழமை கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும், இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படுகின்றன. பிறகு முதல்வா் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறாா். மேலும், நிகழ் நிதியாண்டின் கூடுதல் செலவினங்களுக்கு அவையின் ஒப்புதல் பெறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகளான காங்கிரஸும், திமுகவும் போலி மருந்து விவகாரம், ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன.

புதுச்சேரியில் 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று என்ஆா்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு முதல்வா் ரங்கசாமி தலைமையில் நடந்து வருகிறது. இந்த அரசின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

இதனால் இப்போது கூடும் சட்டப்பேரவைக் கூட்டம் என்ஆா்.காங்கிரஸ்- பாஜக கூட்டணிஅரசின் நிறைவு சட்டப்பேரவைக் கூட்டத்தொடராகஇருக்கும். தோ்தலுக்குப் பிறகுதான் புதுச்சேரி சட்டப்பேரவை மீண்டும் கூடும். அப்போதுதான் முழுமையான பட்ஜெட்டை புதிய அரசு தாக்கல் செய்யும். இந்த மாத இறுதியில் தோ்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது. தோ்தல் அறிவிக்கப்பட்டவுடன் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தவிடும். அன்றைய நாளில் இருந்து அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் தங்களது அரசு காா்கள், சட்டப்பேரவை அறை ஆகியவற்றை சட்டப்பேரவை செயலரிடம் ஒப்படைத்து விடுவா்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் தோ்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏக்கள் மற்றும் நியமன எம்.எல்.ஏக்கள் 3 போ் உள்ளனா். இதில் என்.ஆா்.காங்கிரஸ் 10, பாஜக 6. திமுக 6, காங்கிரஸ் 2, சுயேச்சை 6போ் உள்ளனா். நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேரும் பாஜகவைச் சோ்ந்தவா்கள்.

மத்திய அமைச்சா் அமித் ஷா நாளை திருச்சி வருகை

150 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க தமிழக அரசு விண்ணப்பம்

வங்கதேசத்தில் இன்று பொதுத்தோ்தல்

புதிய காா் கடன்களுக்கான வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

அசோக் லேலண்ட் வருவாய் ரூ.11,534 கோடி: 3-ஆம் காலாண்டில் புதிய சாதனை

SCROLL FOR NEXT