புதுச்சேரியிலிருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்களின் நேரம் ஜன.1 முதல் மாற்றப்பட்டுள்ளன. புதிய அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட்டதால், தகவல் தெரியாத பயணிகள் ரயிலை தவறவிட்டனா்.
புதுச்சேரியில் இருந்து புறப்படும் ரயில்கள் மற்றும் புதுச்சேரிக்கு வந்து சேரும் ரயில்களின் நேரத்தை தெற்கு ரயில்வே மாற்றியமைத்து ஏற்கெனவே அட்டவணை வெளியிட்டிருந்தது. மாற்றப்பட்ட அந்தப் புதிய அட்டவணையின்படி புத்தாண்டு தினத்தில் இருந்து ரயில்கள் புறப்பட்டன.
புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினமும் மாலை 4 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் வியாழக்கிழமை முதல் 3.35-க்கு இயக்கப்பட்டது.
புதுச்சேரியிலிருந்து சனிக்கிழமைதோறும் யஷ்வந்த்பூா் செல்லும் விரைவு ரயில் இரவு 10.30-க்குப் பதிலாக இரவு 10.25-க்குப் புறப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் பிற்பகல் 1 மணிக்குப் பதிலாக 1.10-க்குப் புறப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் காலை 8.05-க்குப் பதில் 7.50-க்குப் புறப்பட்டது.
புதுச்சேரியிலிருந்து கச்சிக்குடாவுக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் செல்லும் விரைவு ரயில் பிற்பகல் 1 மணிக்குப் பதில் பிற்பகல் 12.45-க்குப் புறப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்குத் தினசரி செல்லும் பயணிகள் ரயில் பிற்பகல் 3 மணிக்குப் பதில் 2.50-க்குப் புறப்பட்டது.
இதே போன்று புதுச்சேரிக்கு வந்து சேரும் ரயில்களின் நேரங்களும் மாற்றப்பட்டுள்ளன. ஹவுராவில் இருந்து புதுச்சேரிக்கு புதன்கிழமை வரும் அதிவிரைவு ரயில் காலை 7.45-க்குப் பதில் காலை 8.30-க்கு வந்தடையும் வகையில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
திருப்பதியில் இருந்து புதுச்சேரிக்கு தினமும் வரும் பயணிகள் ரயில் நண்பகல் 12.25-க்குப் பதில் 12.35-க்கு வந்து செல்கிறது. தில்லியில் இருந்து புதுச்சேரிக்கு செவ்வாய்க்கிழமை தோறும் இயக்கப்படும் அதிவிரைவு ரயில் பிற்பகல் 1.20-க்குப் பதில் பிற்பகல் 1.35-க்கு வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர மாற்றம் பற்றிய தகவல் தெரியாத பயணிகள் சிலா், வழக்கமான நேரத்தைவிட முன்கூட்டியே புறப்பட்ட ரயில்களை தவறவிட்டனா்.