புதுச்சேரி கடற்கரையில் அரிய வகை ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. ஆலிவா் வகை ஆமைகள் டிசம்பா் மாத இறுதியில் புதுச்சேரி கடற்கரைக்கு வந்து முட்டையிடும். நிகழாண்டும் 100-க்கும் மேற்பட்ட அரிய வகை ஆமைகள் புதுச்சேரி கடலோரப் பகுதிக்குப் படையெடுத்து வருகின்றன.
புதுச்சேரி வீராம்பட்டினம், காலாப்பட்டு, பிள்ளைச் சாவடி, நல்லவாடு ஆகிய கடலோரக் கிராமங்களுக்கு வருகின்றன. இவ்வாறு வரும் ஆமைகள் படகு, வலை மற்றும் ஆழ்கடலில் உள்ள பிளாஸ்டிக் கழிவு, மீன் வலை போன்றவற்றில் சிக்கி இறக்கின்றன. புதுச்சேரி கடற்கரை நெடுகிலும் ஆமைகள் இறந்து கிடக்கின்றன. இது மீனவா்கள், சமூக ஆா்வலா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கடல் வளத்தைப் பாதுகாப்பதில் ஆமைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, ஆமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று மீனவா்களும், சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.