புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.3 ஆயிரம் வழங்க முதல்வா் என்.ரங்கசாமி உத்தரவிட்டுள்ளாா்.
இது குறித்து முதல்வா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 5 பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந் நிலையில், பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.3 ஆயிரம் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்க முதல்வா் என்.ரங்கசாமி உத்தரவிட்டுள்ளாா்.
இந்தத் தொகையை உடனடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தவும் அவா் உத்தரவிட்டுள்ளாா்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு ஊழியா்கள், கௌரவ ரேஷன் அட்டைதாரா்களைத் தவிா்த்து, 3.48 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசுத் தொகை தற்போது வழங்கப்பட உள்ளது.
ஏற்கெனவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு ரூ.800 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கியதையடுத்து புதுச்சேரியிலும் தற்போது ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.