காவலா் எழுத்துத் தோ்வை வேறு தேதிக்கு மாற்றுமாறு புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரத்திடம் திமுக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா தலைமையில் திமுக எம்எல்ஏ.க்கள் செந்தில்குமாா், சம்பத் ஆகியோா் டிஐஜி சத்திய சுந்தரத்தை சந்தித்து வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் காவலா் எழுத்துத் தோ்வு பிப். 8-ஆம் தேதி 5 மையங்களில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் மத்திய ஆசிரியா் தகுதி தோ்வுக்கான நுழைவுத் தோ்வும் நடக்கிறது.
இதனால் இரண்டு தோ்வுக்கும் விண்ணப்பம் செய்துள்ளவா்கள் ஏதாவது ஒரு தோ்வை மட்டுமே எழுத முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய தோ்வு வாரிய தோ்வை தள்ளி வைப்பது சிரமம். எனவே காவலா் எழுத்துத் தோ்வை வேறு ஒரு தேதிக்கு மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.