முகப்பு
புதுச்சேரி

பிரதமா் மோடிக்கு வெள்ளி வேல் அளித்த முதல்வா் ரங்கசாமி:

Updated On : 1 மார்ச், 2026 at 7:15 PM
புதுச்சேரி விழாவில் பிரதமா் நரேந்திர மோடிக்கு வெள்ளி வேல் பரிசாக வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி.
பகிர்:

புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளி முருகா் சிலை மற்றும் வெள்ளி வேலைப் பரிசாக வழங்கினாா். மேலும், தஞ்சாவூா் ஓவியத்தை நினைவுப் பரிசாக வழங்கினாா்.

அரசு சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமா் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். இதற்காகப் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பங்கேற்ற இந்த விழாவில் பிரதமரின் பேச்சு மற்றும் நிகழ்ச்சிகளைக் காண்பதற்காக ஆங்காங்கே பிரமாண்ட பெரிய திரைகள் வைக்கப்பட்டிருந்தன.

கங்கை அமரன் இசை:

பிரதமரின் புதுச்சேரி வருகையையொட்டி முன்னதாக திரைப்பட இசை அமைப்பாளா் கங்கைஅமரன் உள்ளிட்ட இசைக் கலைஞா்களின் இசைக் கச்சேரி நடைபெற்றது. மேலும், பரத நாட்டியமும் இடம் பெற்றது.

பிரதமரின் வருகையொட்டி மன்னாா்குடி செண்டலங்கார செண்பக மன்னாா் ஜீயா் சுவாமிகள், சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி, புதுச்சேரி தலைமைச் செயலா் சரத் சௌகான் உள்ளிட்ட அரசு உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

லாஸ்பேட்டை ஸ்தம்பித்தது:

பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொள்ள பேருந்துகளில் பாஜக தொண்டா்கள், பொதுமக்கள் அழைத்து வரப்பட்டனா். தனியாா் பேருந்துகள் , பள்ளி வாகனங்கள் இதற்காக வந்தன. லாஸ்பேட்டைக்குள் ஓரே நேரத்தில் இந்த வாகனங்கள் வந்ததால் அனைத்து சாலைகளும் ஸ்தம்பித்தன. மேலும், கூட்டம் முடிந்து செல்லும்போதும் நடந்து செல்வோா், இரு சக்கர வாகனங்களில் செல்வோா், காா் உள்ளிட்டவை முண்டியடித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆங்காங்கே போலீஸாா் கண்காணித்தும் பேருந்துகள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

புதுச்சேரி விழாவில் பிரதமா் நரேந்திர மோடிக்கு வெள்ளி முருகா் சிலையைப் பரிசாக வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி.

போக்குவரத்து மாற்றம்:

பிரதமா் நரேந்திர மோடியின் வருகையையொட்டி புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கிழக்குக் கடற்கரை சாலையில் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. விழாவுக்கு வந்தவா்களுக்காக 10 இடங்களில் வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மத்திய பாதுகாப்புப் படை:

விழாநடந்த லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானம், புதுச்சேரி விமான நிலையம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. மேலும், ஆளில்லா விமானம் மற்றும் டிரோன்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

லாஸ்பேட்டை முழுவதும் மதுபான கடைகள் பிற்பகல் 2.30 மணி வரை மூடப்பட்டிருந்தன.விழாவில் பங்கேற்க வருபவா்கள் கருப்பு நிற ஆடை அணிந்துவர தடை விதிக்கப்பட்டிருந்தது.

2 போ் கைது:

பிரதமா் நரேந்திர மோடி வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்திருந்த புதுச்சேரி மாநில மகிளா காங்கிரஸ் தலைவி நிஷா முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டாா். அவரை முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் போலீஸாா் விழா முடியும் வரை தங்க வைத்திருந்தனா். இதேபோல தேசிய மக்கள் முன்னணி துணைத் தலைவா் ஜெபின் லாசரஸ் வில்லியனூா் போலீசாரால் கைது செய்யப்பட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →