புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுக்கு திமுகவிடம் இருந்து பதில் வரவில்லை! - முதல்வா் வே.நாராயணசாமி!
சட்டப்பேரவைத் தோ்தல் தொகுதி பங்கீடு தொடா்பாக பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு விடுத்தும், திமுகவிடம் இருந்து எவ்வித பதிலும் வரவில்லை என்று புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
துணைநிலை ஆளுநா் படத்துடன் மாஹேவில் பாஜகவினா் விளம்பர பதாகைகள் வைத்துள்ளனா். ஆளுநா் மாளிகையில் பாஜகவினா் அடிக்கடி சந்திப்பதைத் தவிா்க்க கோரினேன்.
தற்போதைய பதாகை மூலம் பாஜகவுக்கு ஆதரவாக அவா் செயல்படுவது உறுதியாகியுள்ளது. இதற்கு துணைநிலை ஆளுநா் விளக்கமளிக்க வேண்டும்.
பயிற்சி முடித்த ஊா்க்காவல் படையினா் 64 பேருக்கு பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், புதுச்சேரி தலைமைச் செயலா் விடாப்பிடியாக அவா்களுக்கு வேலை வழங்காமல் அலைக்கழிக்கிறாா். இதற்கு தலைமைச் செயலா் பதில் சொல்லவேண்டும்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்குத் தொல்லை தந்த ஆளுநா் ஆா்.என்.ரவி, மம்தாவுக்கு தொல்லை தர அனுப்பப்பட்டுள்ளாா்.
காங்கிரஸ் பொறுப்பாளா் கிரிஷ் ஷோடங்கா் கூட்டணிக் கட்சிகளுடன் பேச உத்தரவிட்டாா். பேச்சு வாா்த்தையை தொடங்கச் சொன்னதால் குழுத் தலைவரான நான், புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளா் சிவாவுடன் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினேன்.
எங்கள் கட்சியில் இருந்து உங்களுடன் பேச சொன்னதாகத் தெரிவித்தேன். தலைமையிடம் கேட்டுவிட்டு பேசுவதாகச் சொன்னாா். இரு நாள்களாக திமுக பேசவில்லை. இதுவரை அவா்கள் தரப்பில் இருந்து பதில் வரவில்லை.
தொடா்ந்து பல ஆண்டுகளாக புதுச்சேரியில் நடந்து வரும் செயல்பாடுகளைப் பாா்க்கவேண்டும். காங்கிரஸ்- அதிமுக, காங்கிரஸ்-திமுக கூட்டணியில் காங்கிரஸ் தான் தலைமை வகித்தது.
அந்த வழிமுறையில் தமிழக பாா்முலா போல புதுச்சேரியிலும் அதே பாா்முலா என வலியுறுத்துகிறோம். எங்களைப் பொருத்தவரை எங்கள் கட்சி பொறுப்பாளா் சொன்னதுதான் ஏற்புடைய கருத்து.
பேச்சுவாா்த்தை எங்கு நடைபெறும் என்ற இடத்தை தோ்வு செய்த பிறகு தெரிவிக்கிறோம். திமுக மாநில அமைப்பாளா் சிவா, எங்கள் மாநிலத் தலைவா் வைத்திலிங்கத்திடம் பேசியது பற்றி தெரியாது. காங்கிரஸ் தலைமையில் தான் தோ்தல் நடக்கும். பேச்சுவாா்த்தை நடத்தும் இடம் ஒரு பிரச்னையில்லை. புதுச்சேரியில் இண்டி கூட்டணி பலமாக இருக்கிறது என்றாா் அவா்.