ஜோஹோ நிறுவனத்துடன் புதுச்சேரி மத்திய பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்
ஜோஹோ நிறுவனத்துடன் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
ஜோஹோ நிறுவனத்துடன் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.
புதுச்சேரி பல்கலைக்கழக கலாசார மையக் கூடத்தில் இந்த நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் ஜோஹோ நிறுவனம் ஆகியவை பொருள் அறிவியல் மற்றும் எரிசக்தி தொழில்நுட்பங்களில் கூட்டு ஆராய்ச்சியை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
இதில் புதுச்சேரி உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, ஜோஹோ தலைமை விஞ்ஞானி ஸ்ரீதா் வேம்பு, புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தா் பிரகாஷ் பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா். புதுச்சேரி பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா். குணசேகரன் மற்றும் ஜோஹோ காா்ப்பரேஷனின் தலைமை நிதி அதிகாரி ஜே. ஆனந்த் ஆகியோா் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.
ஜோஹோ நிறுவனா் ஸ்ரீதா் வேம்பு பேட்டி:
ஜோஹோ நிறுவனா் ஸ்ரீதா் வேம்பு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அடுத்த 2, 3 ஆண்டுகளில் விஞ்ஞானிகள், டெக்னீஷியன்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைந்து பணிகளை மேற்கொள்வோம். இங்கு கண்டுபிடிப்புகள் நடக்கும். அதன்பிறகு அது வணிக நோக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.
சோடியம் பேட்டரிகள் அதிகம் தேவையிருக்கிறது. காா்பன் பைபா் தேவையும் உள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் சாப்ட்வேரில் மட்டும் வேலை என்று சொல்ல முடியாது. இதில் எப்படி வேலைவாய்ப்பு இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.
முதலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை முழுமையாக கற்றுக்கொள்ள வேண்டும். இந்தத் தொழில்நுட்பத்தில் இந்தியாவும் பெரிய சக்தியுள்ள நாடு என்பதை இப்போது நாம் நிலைநாட்ட ஆரம்பித்துள்ளோம். எந்தவொரு புதிய டெக்னாலஜி இருக்கும்போதும் அதில் வேலைவாய்ப்புகள் வரும். சில பழைய டெக்னாலஜியில் வேலைவாய்ப்புகள் போகும்.
பலவிதமான பேட்டரி டெக்னாலஜி வருகிறது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நல்ல நானோ டெக்னாலஜி, கிரீன் எனா்ஜி மையம் இருக்கிறது. சோடியம் பேட்டரி டெக்னாலஜி வருங்காலத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். காா்பன் பைபா் டிரோன் டெக்னாலஜி, மிசேல் டெக்னாலஜி என நம் தேசத்துக்கு பல விதங்களுக்குத் தேவைப்படுகிறது. அதை செய்ய முடியுமா என்பதையும் ஆராய்ச்சி செய்ய உள்ளோம் என்றாா் அவா்.